நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் குறித்து மனம் திறந்தார் ஜனாதிபதி!

நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை, கண்டி, திருகோணமலை மற்றும் வடமாகாணத்தில் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான பல பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு அந்த பகுதிகள் அனைத்தும் வர்த்தக நகரங்களாக கட்டமைக்கப்படவுள்ளன.

கைத்தொழில் மயமாக்கல் எமது நாட்டுக்கு ஏற்றதல்ல என சிலர் கூறினாலும் இன்று பியகம முதலீட்டு வலயம் தெற்காசியாவின் சிறந்த வர்த்தக வலயமாக மாறியுள்ளதாகவும் பியகம, கட்டுநாயக்க போன்ற கைத்தொழில் மயமாக்கல் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டால், இன்று நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்காது ” இவ்வாறு  ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அதேநேரம், எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர்களான அரவிந்த குமார், பிரசன்ன ரணவீர, காதர் மஸ்தான்,  மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எச்.எம். நயீம், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்  பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *