மன்னார் மாவட்டத்தின் இலங்கை செஞ்சிலுவை சங்க பிரதான கிளை தலைமை பதவிக்கு தொடர்சியாக இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் முன்னாள் தலைவரால் இன்றையதினம்(25) அலுவலகம் வலுக்கட்டாயமாக பூட்டு போடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார் மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நபரொருவர் தலைமை வகித்து வந்த நிலையில் இம் மாதம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்ற சாட்டின் பெயரில் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றுக்காக விசாரணை நடவடிக்கை முடியும் வரை குறித்த தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்
அதே நேரம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தில் உறுப்புரிமையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்தார்
இந்த நிலையில், மன்னார் மாவட்ட கிளையின் தீர்மானத்திற்கு அமைவாகவும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாப்பின் பிரகாரமும் மன்னார் மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் உப தலைவர் தற்காலிக தலைவராக பெயரிடப்பட்டிருந்தார்
இந்த நிலையில் முன்னாள் தலைவர் குறித்த முடிவை ஏற்றுகொள்ள முடியாது எனவும், நான் தான் எப்போதும் தலைவராக செயற்படுவேன் எனவும் அதுவரை எந்த செயற்பாடும் அலுவலகத்தில் இடம்பெறகூடாது என்ற அடிப்படையில் அடாவடித்தனமாக கதவுகளுக்கு பூட்டிட்டு பூட்டியுள்ளார்
இதனால் அலுவலகத்திற்கு சேவைக்காக வருகை தந்த ஊழியர்கள் பொதுமக்கள் என எவரும் சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது
இலங்கை செஞ்சிலுவை சங்கம் தேசிய ரீதியில் பல்வேறு நல்ல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதும் மன்னார் மாவட்ட செஞ்சிலுவை சங்கம் பெயர் சொல்ல கூடிய அளவு எந்த செயற்திட்டங்களையும் செய்யவில்லை.
அத்துடன் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கான அலுவலக கட்டட நிர்மாணம் கூட பல வருடங்களாக பூரணப்படுத்தப்படாத நிலையே நீண்ட காலமாக காணப்படுவதாகவும் மன்னார் கிளையில் இடம் பெற்ற ஊழல் நடவடிக்கைகளே இதற்கு காரணம் எனவும்அது மாத்திரம் இல்லாமல் நீண்ட காலமாக குறித்த நபர் நிர்வாக தெரிவின் போது கிளை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காது நிர்வாக தெரிவுகளை மேற்கொள்வதாகவும் அதன் காரணமாகவே அவர் நீண்ட காலமாக தலைமை பதவியில் உள்ளார் எனவும் பல ஊழல் செயற்பாடுகளை தலைமை பதவியை கொண்டு மூடி மறைத்துள்ளதாகவும் இலங்கை செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.






