திருகோணமலை -திரியாய் காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்றவர் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (28) ,மாலை இடம் பெற்றுள்ளது.
கஷ்ட நிலைமை காரணமாக விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற போது விழுந்து கிடந்த மரத்துக்கு கீழால் உறங்கிக் கொண்டிருந்த கரடி பாய்ந்து தாக்கியதால் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இவ்வாறு படுகாயமடைந்தவர் கும்புறுபிட்டி- நாவல்சோலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான என். செல்வராசா (41 வயது) எனவும் தெரிய வருகின்றது.
குறித்த பிரதேசத்தில் கரடிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், தேன் எடுக்கும் காலத்தில் கரடிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
படுகாயம் அடைந்து குறித்த நபர் சுய நினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குக்குட்பட்ட சோபிதகம பகுதியைச் சேர்ந்த பீ.சமன்த (51வயது) என்பவர் சைக்கிளில் இருந்து விழுந்து மயக்கமுற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





