சட்ட ரீதியான முறையில் விகாரை அமைப்பதை நிறுத்த முடியாது -திருமலை பொலிஸ் உயரதிகாரி தெரிவிப்பு ! samugammedia

சட்ட ரீதியான முறையில் விகாரை அமைப்பதை நிறுத்த முடியாது என திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

திருகோணமலை- இலுப்பைக்குளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ரஜமஹா விகாரையின் நிர் பணிகளை நிறுத்துமாறு கோரி இன்று (01) பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க இருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு திருகோணமலை நீதிமன்றம் எட்டு பேருக்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க வேண்டாம் என தடையுத்தரவு பிறப்பித்திருந்தது

இதனை அடுத்து குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிவில் சமூக ஆர்வலரான வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் உட்பட சிலர் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இதே நேரம் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டாம் என பொலிஸார் தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முற்பட்டனர்.

அத்துடன் ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களைக் கேட்டு பதிவு செய்யும் போது திருகோணமலைக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து சொல்ல தேவையில்லை என குறித்த சிவில் சமூக ஆர்வலரை விரட்டியதையும் காணக் கூடியதாக இருந்தது.

கருத்து சுதந்திரம் நாட்டில் இருந்த போதிலும் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காத பொலிஸாருக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பது எனவும் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கட்டிட நிர்மாண பணிகளை இடை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் உதவியுடன் கடந்த சில நாட்களாக கட்டிட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த இடத்தில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்ற  நிலையில்  விகாரை சட்ட ரீதியாக அமைக்கப்பட்டு வருவதாக திருகோணமலை பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அப்படி குறித்த கட்டிடத்தை கட்டுவதை தடை செய்வதென்றால் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தாக்கல் செய்யுமாறும், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து சமூகங்களுக்கு இடையே விரிசல்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் இதன் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *