சமூக சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்து போனமையே -இளங்கோவன் தெரிவிப்பு ! samugammedia

இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்து போனமையே என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று இடம்பெற்ற நூற்றாண்டு விழாவின் கல்லூரி தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூகப் பாதுகாப்பென்பது இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதொன்றாகும், அன்றைய காலங்களில் கிராமங்களில் ஒரு அதிபர் அல்லது ஆசிரியர் வீடுகளில் மக்கள் காலையில் கூடுவார்கள் மக்களை வழிப்படுத்துபவராக அவர்கள் காணப்பட்டார்கள் அது தீர்க்கமான நல்ல முடிவுகளை தருகின்ற சமூகங்களை கொண்டிருந்தது.

இன்று இது மாறியுள்ளது மீண்டும் இவ்வாறு வரவேண்டும் என்றால் முன்பு போல இறுக்கமான கட்டமைப்புக்கள் சமூகங்களில் உருவாக்கப்படவேண்டும். அதுமட்டுமல்ல பாரம்பரிய விழாக்களை கொண்டாடிவதன்மூலம் அதனை அடுத்த சந்ததிகளுக்கு ஊட்டவேண்டிய தேவை உள்ளது.

கல்வியில் எவ்வாறான சீரமைப்புக்களை ஏற்படுத்தினாலும் சிறந்த ஆசிரியரால்தான் முழுமையான மாணவனை உருவாக்கமுடியும் சமூகத்தில் சவால்களை சந்திக்ககூடிய மாணவனை உருவாக்குவது சிறந்த ஆசிரியரால்தான் முடியும்.இதில் கலாசாலையின் பணி மகத்தானது.

பாரம்பரிய கற்பித்தல் முறைகள் மாறி நவீன கற்பித்தல் முறை இன்று வந்துவிட்டது.இது மாணவருக்கு நன்மையாகும். ஆசிரியரும் அதற்கேற்றவாறு இசைவாக்கமடைந்தால்தான் சிறந்த சமூகத்தினை கொண்டுவரமுடியும் தேர்வுமுறையிலிருந்து தன்னம்பிக்கை உடையவர்களை உருவாக்கும் சூழலில் நாம் இருக்கின்றோம்.

கூடுகளிற்குள் வசிக்கும் மாணவர்களாகவே இன்று அவர்கள் இருக்கிறார்கள் சமூக செயற்பாடுகளிற்கு இயலுமை கொண்டவர்கள் அல்லாமல் எமது மாணவர்கள் மாறியிருப்பது எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கியுள்ள காலமாக இது இருக்கிறது. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *