வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து 7 கோடி கொள்ளை…! களத்தில் இறங்கிய பொலிஸார்…!samugammedia

புத்தளம் – வென்னப்புவ கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட வாய்க்கால, அங்கம்பிட்டிய பிரதேசத்திலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் குழுவொன்று வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் கூட்டுறவு கிராமிய வங்கியின் முகாமையாளர் வென்னப்புவ தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் கடந்த சனிக்கிழமை (30) முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த வங்கியின் ஜன்னல் கம்பியை வெட்டி அதன் வழியாக உள்ளே சென்ற கொள்ளையர்கள்,  தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை (சேப்) இயந்திரங்களின் உதவியுடன் உடைத்து அதிலிருந்த தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 7 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வங்கியில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், இந்த கொள்ளையின் பின்னர் வங்கியில் பொருத்தப்பட்ட கமராக்களின் சில பகுதிகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, குறித்த வங்கியைச் சுற்றியுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்களை பரிசோதனை செய்து, இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளையர்களை கைது  செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *