கடந்த சில நாள்களில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானப் பயணங்கள் தாமதமாகியதன் காரணமாக சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் விமான ஊழியர்களுக்கு தற்சமயம் கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்கமுடியாது என துறைமுகங்கள். கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் கடந்த சில நாள்களில் சரியான நேரத்தில் பயணிக்கத் தவறியமை தொடர்பாகவும், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாகவும் விமானத்துறை அமைச்சர், சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகத்தினர் மற்றும் அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச சட்டங்களுக்கமைய, ஒரு விமானி மாதத்திற்கு 100 மணிநேரம் விமானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எமக்குக் கிடைத்த அறிக்கைகளின்படி, கடந்த காலங்களில் நாட்டின் விமானி ஒருவர் மாதத்திற்கு சுமார் 60 மணிநேரம் மாத்திரமே விமானத்தைச் செலுத்தியுள்ளார்.
ஒரு விமானி மாதத்துக்குக் குறைந்தது 80 மணிநேரம் பறந்திருந்தால், இத்தகைய சிக்கல் ஏற்பட்டிருக்காது. உயர்தர விமானச் சேவையை வழங்குவதில் எமக்கு பெரும் பொறுப்பு உள்ளது. சிறிலங்கன் எயார்லைன்ஸின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் வேறு விமான நிறுவனங்களுக்கு இந்த விமானங்களை இயக்குவதற்கான உரிமையை வழங்கத் தீர்மானித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.





