கிளிநொச்சி இராமநாதபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் நேற்றையதினம் இரவு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் மற்றைய வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வாய்த்தர்க்கம் காரணமாக மறுநாளான இன்றைய தினம் அதிகாலை குறித்த வீட்டில் யாரும் இல்லாத சமயம் இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.
அதாவது அந்த வீட்டு உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவரது மனைவி சுகயீனம் காரணமாக தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் ஒருவரும் இல்லாத சமயத்தில் வீட்டின் கண்கானிப்பு கமராக்களை உடைத்துவிட்டு வீட்டின் கதவுகளை உடைத்து தீ வைத்ததுடன் தொலைக்காட்சி மின் இனைப்புக்கள் மற்றும் மின் விசிறி என 80 லட்சம் ரூபாவிற்கு அதிகமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீயணைக்கப்பட்டதுடன் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த இராமநாதபுரம் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் இச்சம்பவத்தின் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.












