கொழும்பில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத்தகவல்களின் உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் சிறைக்கைதி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளாரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கொழும்பின் 7 இடங்களில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கைதி ஒருவர் கொழும்பின் பல பகுதிகளில் குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கடிதம் ஒன்றை விட்டுச்சென்றதாகவும் அதில் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் இதுவரையில் அவ்விடயம் தொடர்பில் எந்த தகவல்களையும் புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தவில்லை.
கைதி வழங்கிய தகவலுக்கு அமைவாகவே தற்போது உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் இந்த விடயம் தொடர்பில் உறுதிப்படுத்த தகவல்கள் வெளிப்படுத்தப்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.




