இஸ்ரேல்- ஹமாஸ் போராளிகளுக்கு இடையேயான மோதலில் காணாமல் போன இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த நெருக்கடியில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்களும், ஒரு ஆணும் காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று தெரிவித்தது.
இந்நிலையில் மோதலில் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக SLBFE க்கு தகவல் கிடைத்துள்ளதாக அதன் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.
எனினும், அதிகாரிகள் காசா பகுதிக்குள் நுழைவதற்கு இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
குறித்த பெண் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளுமாறு இலங்கை தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஊடாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை காஸா எல்லையில் உள்ள இஸ்ரேல் மக்களை அகற்றி வேறு இடங்களுக்கு அனுப்புவதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இலங்கையர்கள் 17 பேர் அங்கு பணியாற்றுகின்றனர்.
அவர்களையும் வேறு இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.





