உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது எனவும், தேர்தலுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.
பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க உலகத்தை வலம் வருகிறார்.
ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு எட்டப்படவில்லை. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் தீர்மானங்களை முன்னெடுக்கிறது.
சர்வதேச நாணய நிபந்தனைக்கு அமைய வரி உட்பட அத்தியாவசிய சேவை கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன.
மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.