இலங்கையில் மனித கடத்தல் தொடர்பிலான பல வழக்குகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள 39 வயதான முகமது இம்ரான் கான் அல்லது ஹாஜா நஜர்பீடன் எனப்படுபவர், இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் பெங்களூர் பிரிவினர் தொடர்ந்து இவரை கண்காணித்துவந்த பின்புலத்திலேயே நேற்று தமிழகத்தில் கைதுசெய்துள்ளனர்.
39 வயதான முகமது இம்ரான் கான் அல்லது ஹாஜா நஜர்பீடன் 2021ஆம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கையைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் இவர் தலைமறைவாக வாழ்ந்துவந்த நிலையிலேயே நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் தேசிய புலனாய்வு பிரிவு பல மாதங்களாக ஹாஜா நஜர்பீடனின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளது.
சர்வதேச மனித கடத்தல் சம்பந்தப்பட்ட விடயங்களில் இவர் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.
இவர் தமிழகத்தின் இராமநாதபுரத்திலும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இலங்கை பிரஜைகள் குழுவொன்று இந்தியா வந்து, உரிய ஆவணங்களின்றி கர்நாடகாவின் மங்களூரில் வசித்து வருவதை பொலிஸார் கண்டறிந்த பின்னரே இவர்களது பின்புலத்தில் உள்ளவர்கள் தொடர்பிலான விசாரணைகளை இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் மங்களூரில் 38 இலங்கை பிரஜைகளை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து தப்பிச்செல்லும் குற்றவாளிகள் தமிழ்நாடு வழியாக பெங்களூர் சென்று அங்கிருந்து மங்களூருக்கு செல்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள மனித கடத்தல்காரர் ஹாஜா நஜர்பீடனிடம் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.