கிளிநொச்சியில் பாடசாலை நேரங்களில் போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலை நாட்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரையும், பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் முறிகண்டியில் இருந்து கிளிநொச்சி நகர எல்லை உட்பட பரந்தன் சந்தி வரை டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்துவது என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று(27) வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கூறிய நேர எல்லைக்குள் ஏனைய வாகனங்களின் வேக வரம்பை மணிக்கு 40 கி.மீ ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டதுடன், இந்த விதிகளை மீறும் சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.