நான் இனவாதி இல்லை..! தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அம்பிட்டிய தேரர்..! samugammedia

 

மட்டக்களப்பு – மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என பொது வெளியில் பகிரங்கமாக எச்சரித்திருந்த நிலையில்  தற்போது தனது அந்தக் கருத்துக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். 

தான் மிகுந்த மன வேதனையில் இருந்தததாகவும், இதன் காரணமாக இவ்வாறு பேசியதாகவும் அவர் தமிழர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,

கடந்தவாரம் மட்டக்களப்பு ஜயந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள கல்லறை தொடர்பாக நாடளாவிய ரீதியில் பெரிதும் பேசப்பட்டது. 2

023.10.21ஆம் திகதி இந்த கல்லறையை இடித்து அகற்றுகின்றார்கள். நகர சபைக்கு உரிய வாகனங்களை வைத்து தான் அதை உடைத்தார்கள்.

இதை பார்த்த ஜயந்தி நகர் விகாரையின் விகாராதிபதி மற்றும் சிலர் இணைந்து உடனே பொலிஸிற்கு சென்று முறைப்பாடு செய்தார்கள்.

ஆனால் பொலிஸ் அதனை கன்டுகொள்ளவில்லை. அதற்கு அடுத்த நாள் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அங்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பொழுது எனக்கு நிறைய அழைப்புக்கள் வந்தன, அந்த கல்லறையை உடைக்கின்றார்கள். பொலிஸில் முறைப்பாடு செய்தும் ஏதும் நடக்கவில்லை என்று என்னிடம் சொன்னார்கள். நீங்கள் வரத்தேவையில்லை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என என்னிடம் கூறினார்கள்.

நான் மட்டக்களப்புக்கு சென்ற வேளை அந்த கல்லறையை பார்க்க சென்றேன். அங்கு சென்று நான் பார்த்தபொழுது எனது தாயாரின் எலும்பு எச்சங்களையும் சேர்த்து எடுத்து அந்த இடத்தை நாசம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை நான் கண்டதும் மிகுந்த வேதனைக்கு உள்ளானேன். உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டேன்.

பின்னர் நான் பொலிசாருக்கு தெரிவித்து அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்று அவர்களுக்கும் அதை காண்பித்து ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளீர்கள் என்று நான் கேள்வி கேட்டேன்.

அப்பொழுது அந்த இடத்தில் கூடிய ஊடகவியலாளர்கள் சிலர் என்னை வம்புக்கு இழுப்பதை போல் செயற்ப்பட்டனர். என்னை கோபத்திற்கு உட்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

அருகில் நெருங்கி என்னை படம்பித்தார்கள். அப்போது தான் நான் சில கருத்துக்களை கூறினேன். அந்த கருத்துக்களை பிரதானமாக வைத்து சில தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை குழப்பும் வகையில் சில செயற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அது உண்மையில் கவலைக்குரிய விடயம்.

அப்பாவி தமிழ் மக்கள் இதற்கு காரணம் இல்லை. ஆனால் அரசியல் செய்யும் மற்றும் ஊடகத்தில் இருக்கும் சிலர் நான் கூறிய அந்த கருத்துக்களை பெரிதாக சமூகமயப்படுத்தியுள்ளார்கள். 

அப்படி செய்த அனைவருக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன், முக்கியமாக ராசமாணிக்கம் சாணக்கியன் என்ற அரசியல்வாதி கடந்த நாட்களில் நிறைய ஊடக சந்திப்புக்களை நடத்தி அம்பிட்டிய தேரர் ஒரு பைத்தியம் அவருடைய அம்மாவின் கல்லறை அங்கு இல்லை மட்டக்களப்பில் சிங்களவர்களின் கல்லறையும் அங்கு இல்லை என கூறியுள்ளார்.

இராசமாணிக்கம் சாணக்கியன் தான் அந்த கல்லறையை உடைக்க வலியுறுத்தியுள்ளார். அது எனக்கு நன்கு தெரியும். அவர் அப்படி செய்யவில்லை என்றால், ஏன் அவர் அந்த இடத்தில் கல்லறை ஒன்று இல்லை என்று கூறுகிறார். எனக்கு அந்த சந்தேகம் இருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுகொள்ளப்பட்டது. விசாரணையின் போது கல்லறையை உடைத்தவர்கள் உடைத்ததை ஏற்றுக்கொண்டார்கள். 

மீண்டும் அந்த கல்லறையை கட்டித்தருவதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளனர். அதே போல் மன்னிப்பையும் கேட்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில் நானும் நீதிபதியின் முன்னாள், அந்த தருணத்தில் எனக்கு ஏற்பட்ட மனக்கவலையில் நான் கூறிய சில வார்த்தைகளுக்கு தமிழ் மக்களிடமும், இலங்கை பொலிஸாரிடமும் எனது மன்னிப்பை கேட்டுக்கொண்டேன்.

நான் உண்மையில் மிகுந்த வேதனையில் தான் பேசினேன். எனது தாயாரின் எலும்பு எச்சங்களைத்தான் நான் அப்படி பார்த்தேன். ஆகவே நான் கடும் வேதனையில் பேசியவற்றை வைத்து நான் ஒரு இனவாதி என சமூகத்துக்கு காட்ட முற்பட வேண்டாம். 

இவற்றை சமூகமயப்படுத்தி சமூகத்தில் இனவாதத்தை தூண்டுபவர்கள் யார் என்று விசாரித்து தேடிப்பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *