ஆளுமைமிகு அடுத்த தலைமுறையின் உருவாக்கத்துக்கு பாடசாலைகளே களம் அமைக்க வேண்டும்…! சிறீதரன் எம்.பி வேண்டுகோள்…! samugammedia

ஆளுமைமிகு அடுத்த தலைமுறையின் உருவாக்கத்துக்கு பாடசாலைகளே களம் அமைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (03) கிளி/சிவநகர் அ.த.க.பாடசாலையில் நடைபெற்ற தேசியமட்ட சாதனையாளர் மதிப்பளிப்பு மற்றும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சொந்த நாட்டில், தனது இருப்பைத் தக்கவைப்பதற்காக, எல்லாவகையிலும் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தமிழர்களின் அடுத்த தலைமுறை, கல்வித் தளத்திலும் அறிவுப் புலத்திலும் தம்மைத்தாமே நிலைநிறுத்தத் தவறின் எமது இனம் இருப்பழிந்து போய்விடும் என்கிற உண்மையை பிள்ளைகளுக்கு உணர்த்துவதன் மூலம் ஆளுமைமிக்க அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய சமூகக் கடமை பாடசாலைகளுக்கு உள்ளது. 

அந்தவகையில், பெளதீக வளப் பற்றாக்குறைகள் மிகுந்த நிலையிலும், திறமைக்கு எதுவும் தடையல்ல என்பதை உறுதி செய்பவர்களாக, தமது பள்ளியின் பெயரையும் ஊரின் பெயரையும் உயர்த்துவதற்காய் உழைப்பவர்களாக உள்ள கிளி/ சிவநகர் அ.த.க பாடசாலையின் மாணவர்கள் ஏனையோருக்கு முன்னுதாரணமானவர்கள். 

எத்தனையோ இடர்களையும் தடைகளையும் தாண்டி, வசதிவாய்ப்புகள் நிறைந்த பல பாடசாலைகளால் நெருங்க முடியாதிருக்கும் தேசியமட்ட வெற்றியை, தொடர்ச்சியாக தேசியமட்ட கபடிப் போட்டியில் பெற்றுவரும் இப்பிள்ளைகளினது மனோதிடத்தையும், அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்களது அயராத உழைப்பையும் பாராட்டுகிறேன்  என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

பாடசாலையின் முதல்வர் திருமதி.இளவேந்தி நிர்மலராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிளிநொச்சி தெற்கு கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் பாலசிங்கம் வாசுதேவன், உருத்திரபுரீசுவரர் சிவாலய பிரதமகுரு சிவஸ்ரீ. அமிர்த ஸ்ரீஸ்கந்தராஜக் குருக்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம அலுவலர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் உட்பட பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *