பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் தமிழ்ச்சங்கம் “எட்டுத்திக்கும் எங்கள் கலை ” என்ற தொனிப்பொருளில் ஏற்ப்பாடு செய்த குறிஞ்சிச்சாரல் விழாவானது கண்டி இந்து கலாசார மண்டபத்தில் 05.11.2023( ஞாயிற்றுக்கிழமை) மாலை சிறப்பாக இடம்பெற்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும், தமிழ்ச்சங்க பெரும்தலைவருமான பேராசிரியர். எஸ். பிரசாந்தன், 97 வது செயற்குழு தலைவர் மு. வினோ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக பிரதம நூலகர் ஆர். மகேஸ்வரன் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக முன்னைநாள் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவரும் தமிழ்ச்சங்க மேனாள் பெரும் பொருளாளருமான பேராசிரியர். வை. நந்தகுமார், முன்னைநாள் தமிழ்த் துறை தலைவரும்,தமிழ்ச்சங்க முன்னைநாள் பெருந்தலைவருமாகிய பேராசிரியர் துரை. மனோகரன் மற்றும் முன்னைநாள் முதுநிலை விரிவுரையாளரும் தமிழ்ச்சங்க முன்னைநாள் பெரும்பொருளாளருமான திரு. வ. தர்மதாசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர்கள், சிரேஸ்ர விரிவுரையாளர்கள் உட்பட கண்டியின் முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
இதன் போது கீர்த்தனாஞ்சலி, சங்க கால ஐவகை நிலங்களின் குணாம்சங்களை வெளிப்படுத்தி சங்க நிலச்சங்கம நடனம், இசைச்சாரல், மண் வாசனை நடனம், சொற்போர், நாடகம் என பல்வேறு முத்தமிழ் நிகழ்ச்சிகள் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களால் அரங்கேற்றப்பட்டதுடன் கண்டி திரித்துவக் கல்லூரி மாணவர்களின் சத்தியவான் சாவித்திரியின் கதையினை மையப்படுத்திய வில்லுப்பாட்டும், மோப்ரே கல்லூரியின் இசைக்கானமும், விஹாரமகாதேவி கல்லூரியின் அம்மன் நடனமும், இந்து மாமன்றம் கண்டி அறக்கட்டளை மாணவர்களின் வீணைக்கச்சேரியும், கண்டி, கலசமர்ப்பணா ந்ருத்யக்க்ஷேத்ரா மாணவியின் சிவதாண்டவம் என பல்வேறு கலை நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தது.
இவ் நிகழ்வின் சிறப்பு விருதான சங்கச்சான்றோர் விருது இம் முறை மலையக மூத்த எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் இவர் இதுவரையில் 12 நூல்கள்,95 சிறுகதைகள்,இரண்டு தமிழ் நாவல்கள், மற்றும் ஒரு ஆங்கில நாவலையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிஞ்சிச் சாரல் நிகழ்வு இதுவரையில் யாழ்ப்பாணம், திருகோணமலை, ஹட்டன், கொழும்பு, கண்டி என பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன் 2017 ற்கு பிறகு கடந்து சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு நின்ற குறிஞ்சிச்சாரல் நிகழ்வானது இம் முறை கண்டி மாநகரில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.