என்னை பெரிய வில்லனாக்க, இனவாதியாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன..! சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு samugammedia

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான் நீதிபதி ஒருவரை குற்றம்சுமத்திய போது நீதிபதிகள் பற்றி பேச முடியாதென கொதித்தெழுந்த இந்த சபையிலுள்ள எம்.பி.க்கள், 

கிரிக்கெட் சபை மோசடி தொடர்பில் நீதியரசர்களை பெயர் குறிப்பிட்டு குற்றம்சாட்டும்போது மட்டும் மௌனம் காப்பது ஏன் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.

தற்போது மோசடியாளரென குற்றம்சாட்டப்படும் சம்மியை கிரிக்கெட் சபைத்தலைவராக நியமிக்கும் போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் நாமல் ராஜபக்ஸ.

எனவே கிரிக்கட் சபை மோசடிக்கு முன்னாள் அமைச்சர்களிலிருந்து மாவட்ட அதிகாரிகள் வரை பொறுப்பேற்க வேண்டும். 

தற்போதைய விளையாட்டுத்துறை  அமைச்சர் கூட எல்லாம் முடிந்த பின்னர்தான் விடயங்களை வெளிப்படுத்துகின்றார்.

ஒரு பிரச்சினையை மூடி மறைக்க இன்னொரு பிரச்சினையை கிளப்புவது வழமை, தற்போது வற் வரி அதிகரிக்கப்பட்டு அதற்கு மக்களின் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இதனைவிட மிகப்பெரிய பல பிரச்சினைகள் வரவுள்ளன. போராட்டங்கள் வலுப்பெறவுள்ளன. 

மருத்துவர்கள் தொடர் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.  இந் நிலையில நாட்டு மக்களை திசை திருப்ப கிரிக்கெட் சபை மோசடி பெரிதுபடுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

எனவே இந்த கிரிக்கெட் சபை மோசடி தொடர்பான விவாதத்தை பார்த்து மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

இது ஒருபுறமிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் எனக்கு எதிராக, என்னை பெரிய வில்லனாக்க, இனவாதியாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. 

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரை என்னால் கட்டுப்படுத்த முடியுமா? நான் என்ன இராணுவத்தளபதியா? பொலிஸாரைக் கட்டுப்படுத்த நான் என்ன பொலிஸ்மா அதிபரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *