ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதாகவும் வீதியை மறித்ததாகவும் ஏறாவூர் பொலிஸாரினால் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த மாதம் 08ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைதந்திருந்த நிலையில் அவரின் வருகையின்போது தமது கோரிக்கையினை வலியுறுத்தி கால்நடை பண்ணையாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் அமைதியான முறையில் போராட்டம் நடாத்தினார்கள்.
இதன்போது பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தி பெருமளவு பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் காரணமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
எனினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிவித்து 30பேருக்கு எதிரான வழக்கினை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்றைய தினம் ஏறாவூர்ப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலும் நீதிமன்றத்தினை தவறான முறையில் கொண்டுசெல்லும் வகையிலும் பொலிஸார் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் தமது கடமையினைச்செய்யச்சென்றபோது அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதன் மூலம் அரசாங்கத்தற்கு எதிரான போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிப்பதற்கு செல்லக்கூடாது என்பதற்காக இவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மன்றில் கவனத்திற்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கொண்டுவந்தார்.குறித்த வழக்கினை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
தாங்கள் இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை சமர்ப்பிக்கவுள்ளதனால் தங்களுக்கு திகதியொன்றை தருமாறு பொலிஸார் கோரிய நிலையில் இருவாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில் குறித்த வழக்கானது எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் ஆஜரானவர்கள் பிணை இல்லாமல் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதுடன் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகாதவருக்கு மட்டும் அழைப்பானை வழங்க பணிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.