ஆடைத்தொழிற்சாலை பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்

இன்று (23) காலை 6.10 மணியளவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற பணியாளர்களை ஏற்றுகின்ற பேருந்து ஒன்று ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றுவதற்காக பின்னால் ஆயுபு மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றி வரும் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர் இவர்களை கவனிக்காமல் மாங்குளம் வெள்ளாங்குளம் பிரதான வீதியில் இருந்து அணிஞ்சியன்குளம் 2 ம் பகுதி ஸ்ரீP ஷீரடிசாய்பாபா இல்ல வீதிக்கு திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பேருந்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது

பேருந்து எந்த சமிக்ஞைகளுமின்றி திடீரென திரும்பியதாகவும் இதனால் பேருந்துடன் மோதி தான் தூக்கி வீசப்பட்டதாகவும் மற்றயவர் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு இறந்ததாகவும் காயமடைந்தவர் தெரிவித்தார்

சம்பவத்தில் காயமடைந்த நபர் மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

சம்பவத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா சிவநாதன் என்பவராவார். சம்பவ இடத்துக்கு சென்று மல்லாவி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த பகுதியில் குறித்த பேருந்து சாரதி வழமையாக வேகமாக செல்வதாகவும் இதற்கு முன்னரும் இதே பேருந்து குறித்த பகுதியில் விபத்துக்குள்ளானதாகவும் அண்மையிலும் இந்த பேருந்து மாடு ஒன்றை மோதி மாடு இறந்ததாகவும் இவ்வாறான பொறுப்பற்ற சாரதிகளை ஆடைத்தொழிற்சாலை நிர்வாகம் கவனிக்க வேண்டும் எனவும் பொலிசார் இவ்வாறான சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *