யாழில் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த இளைஞன் – களத்தில் இறங்கிய 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள்..! samugammedia

 

வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி இந்த வழக்கில் 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நாளை 24ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள நிலையில், 

உயிரிழந்த இளைஞனின் சார்பாக 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டத்தரணிகளும் இந்த நடவடிக்கையில் இணைந்துகொள்ள வேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா அழைப்பு விடுத்தார்.

வட்டுக்கோட்டை, சித்தன்கேணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இறப்பதற்கு முன்னர் இளைஞர் பேசிய காணொளிப் பதிவொன்றில், பொலிஸார் தன்னைச் சித்திரவதை செய்தனர் என்று கூறியிருந்தார். இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில் தாக்குதல் மற்றும் சித்திரவதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் வடக்கு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞனின் இறுதிக் கிரியைகள் பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்கெடுப்புடன் நடந்தன. உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல தரப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா, “இளைஞனின் மரணம் கொலை என்பது தெட்டத் தெளிவானது. இந்த வழக்கு நடவடிக்கையில் அனைத்துச் சட்டத்தரணிகளும் இணைந்து கொள்ள வேண்டும். பிரதானமாக குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்தவர்களும் இணைந்துகொள்ள வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

“நாளைய தினம் வழக்கு நடைபெறவிருக்கின்றது. அன்று அவரது உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தொடர்ச்சியான சித்திரவதையால்தான் இளைஞர் மரணமடைந்துள்ளார்.

இந்தக் கொலை தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை பொலிஸ் தரப்பில் விரைவாக எடுக்க வேண்டும். அனைத்து விடயங்களும் நீதிமன்றத்துக்கு வரவேண்டும். இந்தக் கொலைக்குக் காரணமான அனைவரும் நீதிமன்றில் உடனடியாக முற்படுத்தப்பட வேண்டும்.

இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்துடன் யாழ்ப்பாணம் நீதிமன்றில் விண்ணங்களை முன்வைப்போம். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சட்டத்தரணிகள் அனைவரும் இந்த நடவடிக்கையில் இணைந்துகொள்ள வேண்டும். பொலிஸ் காவல் மரணம் என்பது சட்டத்தின் ஆட்சிக்கே விடுக்கப்பட்ட பகிரங்க சவால் அதை நாம் எதிர்கொள்வோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *