மாவீரர் நாள் விவகாரம்…! ரவிகரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை…!samugammedia

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் ஆகிய இருவருக்கும் நேற்றையதினம் முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இரட்டை வாய்க்கால் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையில் கார்த்திகை பூ இருப்பதாகவும், மாவீரர் நாள் என்ற பதம் இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் நேற்றையதினம் பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று முரண்பட்டிருந்தனர்.

அதனையடுத்து மக்களும் , ஏற்பாட்டு குழுவினருமாக  அதனை அகற்ற முடியாதெனவும் அதற்கான விளக்கத்தையும் கூறியிருந்தோம். இதனையடுத்தே குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

குறித்த விசாரனை தொடர்பாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்றையதினம் மாலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு  அழைத்து ஒரு மணித்தியாலயமாக விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர்.

அவ் விசாரணையில் இரட்டை வாய்க்கால் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட  கார்த்திகை பூ மற்றும் மாவீரர் நாள் என எழுதப்பட்டது தொடர்பாகவே வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது.

நாம் நீதிமன்ற கட்டளைகளை மீறவில்லை எனியும் மீறமாட்டோம். 

நவம்பர் 27 எழுச்சியாக இடம்பெற இருக்கும் நாளினை பொலிஸார் திட்டமிட்டு குழப்ப வேண்டும் என ஈற்றிலே விசாரணைக்கும் அழைத்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். ஆனால் நாங்களும் எமது உரிமையை , நினைவு நாளினை நினைவு கூருவோம். 

தேவிபுரம், மாத்தளன், அளம்பில், முள்ளியவளை, முல்லைத்தீவு கடற்கரை, முள்ளிவாய்க்கால் போன்ற பல பகுதிகளில் குழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு மஞ்சள், சிவப்பு கொடிகளையே கட்ட வேண்டாம் என்ற நிலை தான் காணப்பட்டது. 

பொலிஸார் தாங்கள் நினைத்தது போல் , தங்களுக்கு ஏற்றால் போல் குழப்ப வேண்டும் என்ற நோக்கத்திலே செயற்படுகிறார்கள். முன் நின்று செய்பவர்களை பொலிஸ் நிலையம் அழைப்பதும் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதும் இடையூறுகள் ஏற்படுத்துவதுமே இவர்களது நோக்கமாகும். 

குழப்பநிலை எவ்வாறு இடம்பெற்றாலும் இறந்தவர்களது நாளினை நினைவு கூருவோம். 

அத்தோடு எமக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவுக்கு எதிராக இன்றையதினம்(27) காலை நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *