வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு – நீதிமன்றத்தின் நடவடிக்கை! samugammedia

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் மேலும் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டதுடன் அடுத்து வழக்கு தவணையை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ்ப்பாண நீதவான் , எதிர்வரும் 5ஆம் திகதிக்கு அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று(01) நடைபெற்றது.

இதன்போது கடந்த நவம்பர் மாதம் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொறுப்பதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என சட்டத்தரணிகள் அனுமதி கோரிய நிலையில் நீதவான் அதற்கு அனுமதி வழங்கினார்.

எதிர்வரும் 4ம் திகதி வழக்கு விசாரணையின் போது மேலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதுடன் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 4ம் திகதிக்கு பதிலாக எதிர்வரும் 5ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு ,சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த நவம்பர் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இளைஞன் உயிரிழந்தது , யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் , கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த இளைஞனுடன் கைதான இளைஞனின் சாட்சியத்தின் அடிப்படையில் 04 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களாலும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனும் காரணத்தால் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *