ஊடக அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்க அனைத்து விவசாயிகளும் அணி திரள வேண்டும் என மாவட்ட விவசாய சம்மேளனத் தலைவர் செல்லத்தம்பி சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள ஊடக அடக்கு முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட ஒரு மாவட்டம். யுத்தத்தால் பாதிப்படைந்த விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தை மெல்ல மெல்ல கட்டியெழுப்பி வருகின்றனர். இந்த நேரத்தில் விவசாயிகளின் துன்பங்களையும், அவர்களது பிரச்சனைகளையும் இநத மண்ணில் இருந்து ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடனும், துணிவுடனும் வெளிக் கொண்டு வந்துள்ளார்கள்.
அவ்வாறு மக்களின் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என நோக்கோடு செயற்படும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அரச அடக்கு முறைகளை நாம் ஏற்க முடியாது. இது ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடு ஆகும். ஊடகவியலாளர்களுக்கே இந்த நிலை எனில், சாதாரண விவசாயிகளின் நிலையை நாம் எவ்வாறு நோக்கமுடியும்.
எனவே, அரச பாதுகாப்பு தரப்புக்களும், பொலிசாரும் ஊடகங்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகள், மற்றும் மிரட்டல்களுக்கு எதிராக சனிக்கிழமை (02.12) காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேந்து நிலையத்தில் இடம்பெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சம்மேளனமும் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளையும் கலந்து கொண்டு போராட்டத்தை வலுப்படுத்துமாறு மாவட்ட சம்மேளனம் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




