தமிழர் பகுதிகளில் நிலங்களை பறிக்கின்ற, தமிழர்களின் மத அடையாளங்களை அழிக்கின்ற அடையாளமாக தற்போது புத்த பகவான் பயன்படுத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(06) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் எங்களின் நிலங்களை பறிக்கின்ற, எங்களின் மத அடையாளங்களை அழிக்கின்ற ஒரு ஆக்கிரமிப்பின் அடையாளமாக புத்த பகவானை பயன்படுத்துகின்றனர்.
வெளிப்படையாக கூறுவதானால் காணி பிடிப்பதற்கு புத்த பகவானை பயன்படுத்துகின்றனர். இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஒல்லாந்தர் இலங்கை வருகின்ற போது இலங்கை எத்தனை நாடுகளாக இருந்தது? அதேவேளை ஒல்லாந்தர் இலங்கை வந்தபோது இலங் கையில் இருந்த மதம் எது? என்பது தொடர்பில் அமைச்சர் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஒல்லாந்தர் வருகையின் போது பல நாடுகளாக இருந்த இலங்கை பிரித்தானியர்களினாலேயே ஒரு நாடாக்கப்பட்டது.
ஒல்லாந்தர் வருகையின் போது இருந்த மத, மொழி அடையாளங்கள் தற்போது இல்லை.
பௌத்தத்தை, சிங்களவர்களை அடக்கி ஆளவேண்டுமென்ற எண்ணம் தமிழ் ஆயுத அமைப்பிடம் ஒருபோதும் இருந்ததில்லை. அவ்வாறு அவர்கள் செயற்பட்டதும் இல்லை.
இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் தொடர்ச்சியாக தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைப்பதற்கு இனப்பரம்பல் பல்வேறுபட்ட விடயங்கள் ஊடாக நடக்கின்றது.
உங்களின் அமைச்சின் கீழ் இருக்கின்ற ஒரு சில அதிகாரிகளும் அதற்கு உடந்தையாக இருக்கின்றார்கள்.
நாங்கள் தற்போது கேட்பது என்னவென்றால் இன, மத, மொழி அடையாளங் களுடன் எங்களின் பிரதேசங்களில் வாழ வேண்டும் என்பது தான். எனவே இதனை நீங்கள் புரிந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.





