வடக்கில் நெல் வயல்களில் வேகமாக பரவி வரும் தத்தியின் தாக்கம்…! மன்னாரில் விசேட கலந்துரையாடல்…!samugammedia

வட மாகாண ரீதியில்   நெற்பயிரில் வேகமாக பரவி வரும்  பாரிய நோய் தாக்கமான ‘வெண் முதுகு தாவரத்தத்தியின்’ தாக்கம் தொடர்பாகவும் அதனை கட்டுப்படுத்தும் வகையில்,விசேட கூட்டம் இன்றைய தினம்(15) காலை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வட பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய உதவி பணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டு  கருத்துக்களை  வழங்கினார்.

 குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள் , விவசாய திணைக்கள பிரதி நிதிகள் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள  பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஆரம்பத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு பின்னர் குறித்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.எனினும் குறித்த கூட்டம் ஏற்பாட்டிற்கு அமைய இடம் பெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஏ.சகிலா பானு அறிவித்த நிலையில் ஊடகவியலாளர்களுக்கு உரிய அறிவித்தல் வழங்கப்படவில்லை என மன்னார் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நெற்பயிர்ச்செய்கையில் வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்கள் வெண் முதுகு தத்தியினால் பாரிய பிரச்சினைகளுக்கு சவால்களுக்கும் முகம் கொடுத்து   வருகின்ற நிலையில்    4 மாவட்டம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வட பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய உதவி பணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணா அண்மையில் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பும், கிளிநொச்சி மாவட்டத்தில் 800 ஹெக்டெயர் நிலப்பரப்பும்,முல்லைத்தீவு மாவட்டத்தில்  650 ஹெக்டெயர் நிலப்பரப்பும்,வவுனியா மாவட்டத்தில் 700  ஹெக்டெயர் நிலப் பரப்புமாக பெரும் பரப்பு வயல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளது.

மன்னாரை பொறுத்தவரையில் மிக குறுகிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.இவற்றை கட்டுப்படுத்த விவசாயிகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

இந்த நிலையில் மன்னார் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்ற போதும் குறித்த நோய் தாக்கம் குறித்து  ஆராயப்பட்ட விடையங்களை  மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தெரியப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *