ஒரு மாணவன் தான் எதிர்காலத்தில் பெரியவனாகி எந்தச் சிகரங்களைத் தொட்டாலும் எந்தச் சாதனைகளை புரிந்தாலும் தனது வாழ்க்கையை மாற்றிவிட்ட அந்த ஒரு ஆசிரியரை ஒருபோதும் மறக்க மாட்டான். மாணவர் பருவத்தில் பல ஆசிரியர்களிடம் கற்கிறோம். எல்லோரும் எமது உள்ளத்தில் இடம் பிடிப்பதில்லை. ஒரு சிலர்தான் இடம்பிடிக்கிறார்கள். மனதில் என்றும் அழியாமல் வாழ்கிறார்கள்.
வாழ்வில் எந்த விடயத்தையும் கஷ்டப்பட்டு செய்வதை விட இஷ்டப்பட்டு செய்ய வேண்டும் என்பார்கள். அது போன்றுதான் கற்பித்தல் என்ற உன்னத சேவையை இஷ்டப்பட்டு செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். மாணவர்களின் உள்ளங்களில் இடம் பிடிக்கிறார்கள். பெற்றோரின் மரியாதைக்குரியவராகிறார்கள். அதிபரின் பாராட்டைப் பெறுகிறார்கள். ஊராரின் அபிமானத்தைப் பெறுகிறார்கள். காலத்தால் அழியாதவர்களாக மாறுகிறார்கள்.
ஒரு பாடசாலையில் இந்தப் பண்புகளைப் பெற்ற ஆசிரியர்கள் ஓரிருவர் இருந்தாலும் போதும் அந்தப் பாடசாலை மாணவர்களின் சொர்க்க பூமியாக மாறிவிடும்.
இம்முறை அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ள தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் ஆசிரியை ரஈஸா டீச்சர் அவர்கள் பலரதும் அவதானிப்பைப் பெற்றிருக்கிறார்.
கற்பித்தலை விருப்பத்தோடும் அபிமானத்தோடும் செய்கின்ற ஆசிரியராக ரஈஸா டீச்சர் அவர்களை காண முடிந்தது.
கற்பித்தலில் தான் அறிந்து வைத்துள்ள எல்லா நுட்பங்களையும் பயன்படுத்தி கற்பிக்கும் ஓர் ஆசிரியராக அவர் இருக்கிறார்.
தான் கற்பிக்கும் மாணவர்களுக்கு அவர் இரண்டாவது தாயாக அன்பு காட்டி ஆதரவளித்து அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆசிரியராக அவர் திகழ்கிறார்.
தன்னிடம் கற்கும் மாணவர்களது வீடுகளுக்குச் சென்று அவர்களது குடும்பப் பின்னணியை நேரடியாகவே கண்டு தெரிந்துகொண்டார்.
ஒரு வீட்டுப் பெண் ஆசிரியராக பணியாற்றுகின்ற போது தான் எதிர்நோக்கும் சவால்களை கனகச்சிதமாக எதிர்கொண்டு முன்னேறி ஏனைய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்மாதிரியாக மாறினார்.
ஒரு ஆசிரியர் பலரது அபிமானத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒருவராக இருந்தால் அவர் எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்தான். அந்த வகையில் பாடசாலைக்குள்ளும் வெளியிலும் பல சவால்களை அவர் எதிர்கொண்டார். அவற்றை லாவகமாக கடந்து சென்றார் என அவரோடு பணியாற்றிய அதிபர் சாட்சி சொல்கிறார்.
ஒரு ஆசிரியரைப் பற்றி அவரது மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கேட்டுப் பார்த்தால் அவர்கள் சாட்சி சொல்வார்கள். ரஈஸா டீச்சரைப் பொறுத்தவரையில் அவரது மாணவர்களும் பெற்றோரும் அவர் மீது கொண்டிருந்த அபிமானம்தான் அதற்கான சாட்சியாகும்.
அந்த வகையில் தரம் 4 D பெற்றோர்களும் மாணவர்களும் அவருக்கு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு + கௌரவிப்பு + நன்றி கூறல் = விழா ஒன்றே பெரும் எடுத்துக்காட்டாகும்.
கடந்த 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை திஹாரி, தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் தரம் 4 D பெற்றோர்கள் பிரமாண்டமாக விழா எடுத்து தமது ஆசிரியரின் உள்ளத்தைக் குளிரச் செய்தார்கள். நிகழ்வில் மாணவர்களது நிகழ்ச்சிகள் பல அரங்கேற்றப்பட்டன. அதிதிகளாக தாருஸ்ஸலாம் பாடசாலை அதிபர் ஸபீர் சேர், பிரதி அதிபர் சானாஸ் மேடம், அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் ரிப்னா மெடம், தரம் 4 ஏனைய வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும், D வகுப்புக்கு ஏற்கனவே கற்பித்த நிப்ராஸ் ஆசிரியை, தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் SDEC செயலாளர் சகோதரர் நுஸ்ரத் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வு உணர்ச்சிபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் காணப்பட்டது. தமது அபிமானத்துக்குரிய ஆசிரியர் உயர் பதவி பெறுவதையிட்டு மகிழ்ச்சியடைவதா அல்லது எம்மை விட்டுப் போவதையிட்டு கவலையடைவதா என்ற போராட்டத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் காணப்பட்டார்கள்.
கல்வி போதிக்கின்ற ஆசிரியர்களை மதிக்கும் சமூகம் இன்னும் காணப்படுகின்றது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
கல்வி போதிக்கின்ற உன்னதப் பணி செய்கின்ற ஆசிரியர்கள் பற்றிய நல்ல விடயங்களையே வீட்டில் பிள்ளைகளுக்கு மத்தியில் உரையாடுவோம். சங்கடங்கள் ஏற்படும் போது கவனமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்வோம். ஆசிரியர்களின் உள்ளத்தை குளிரச் செய்வது ஒரு மாணவனின் அடிப்படைப் பண்பு என்பதை வீட்டில் எமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்போம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.