உள்ளாடைக்குள் இருந்த தங்க பிஸ்கட்கள்..! கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசமாக சிக்கிய நபர்..!

 

ஏழு மில்லியன் ரூபா பெறுமதியான 66 Tentolas எனப்படும் தங்க பிஸ்கட்டுகளை விமான நிலைய புறப்பாடு முனையத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்ல முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று மாலை 04.00 மணியளவில் விமான நிலைய சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 சந்தேகநபர் கிரிபத்கொட பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் என்பதுடன் அவர் இலங்கை கேட்டரிங் நிறுவனத்தில் சுமார் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். 

அந்த நபர் பவர் பேங்க் அளவுள்ள தங்க பிஸ்கட்களை பொதி செய்ததாகவும், இதுபோன்ற இரண்டு பைகளை, முதுகுவலியைப் போக்கப் பயன்படும் ஆடையில் புத்திசாலித்தனமாக மறைத்து, இடுப்பில் அணிந்து, உள்ளாடையால் மறைத்து சூட்சுமமான முறையில் எடுத்து செல்ல முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. 

விமான நிலையத்தில் உள்ள பொதி பிரிவில் அவற்றை மறைத்து வைத்துவிட்டு, தனது பணிகளை முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பின் புறப்படும் முனையத்தில் இருந்து எடுத்து செல்ல ஏற்பாடு செய்தார். 

இந்நிலையில், விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு சுங்க பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் பொருட்களுடன் சிக்கியுள்ளார். 

Tentolas வகையைச் சேர்ந்த இந்த 24 கேரட் தங்க பிஸ்கட் 116.62 கிராம் எடை கொண்டது. இவ்வாறு பிடிபட்ட அனைத்து தங்க பிஸ்கட்டுகளின் மொத்த எடை 7 கிலோ 7 கிராமாகும். 

சந்தேகநபர் சுங்கப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு, தேவையான வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர், தேவையான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என சுங்க போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *