மன்னாரில் நீராலும் உணவாலும் நோய்தொற்று பரவ கூடிய அபாயம்…! சுகாதார துறையினர் எச்சரிக்கை…!samugammedia

மன்னாரில் திண்ம கழிவகற்றல் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படாவிடத்து மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரிக்கலாம் என்பதுடன் நீர் மற்றும் உணவுகள் ஊடாக பரவும் நோய் தொற்றும் அதிகரிக்க வாய்புள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் T.வினோதன் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நகரசபையின் திண்ம கழிவகற்றல் செயற்பாடு தற்போது ஒழுங்கான முறையில் இடம் பெறாமையினால்  மன்னார் நகர் பகுதி பாரியதொரு சுகாதார சீர்கேட்டு நிலமைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் மக்கள் திண்மக்கழிவகற்றல் செயற்பாட்டை மேற்கொள்ளும் போது சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரம், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை எல்லைக்குள் காணப்படும் வைத்தியசாலைகளிலும் திண்ம கழிவகற்றல் செயன்முறை முற்றாக முடங்கியுள்ளதாகவும்  நகர் புறங்களிலும் பொது இடங்களிலும் அதே நேரம் வைத்தியசாலை சூழலிலும் மருத்துவ கழிவுகள் அல்லாத ஏனைய கழிவுகள் சூழ்ந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார் 

மேலும், தற்போது மழைகாலம் என்பதனால் நோய் கிருமிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பாக டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகமாக காணப்படுவதாகவும் அதே நேரம் வயிற்றோட்டம், வாந்திபேதி போன்ற நோய்களும் மழைகாலத்தில் அதிகமாக பரவுவதற்கான வாய்ப்பு காணப்படும் என்பதுடன் மன்னார் நகர் பகுதியில் தேங்கியிருக்கும் இந்த திண்ம கழிவுகள் இவ்வாறான கிருமி தொற்று பரவலுக்கு ஏதுவாக அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அத்துடன் மன்னார் பொது வைத்தியசாலை சூழலிலும் கழிவுகள் மற்றும் புற்கள் உட்பட பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதாகவும் ஆனாலும் மன்னார் வைத்தியசாலை சுத்தப்படுத்தலுக்கு போதிய ஆளனியினர் இன்மையால் இந்த பிரச்சினை நீடித்து வருவதாகவும் எனவே மன்னார் மக்களின் ஆரோக்கியத்தில் அக்கரை உள்ள பொதுமக்கள்,நலன் விரும்பிகள் வைத்தியசாலை சுழலை சுத்தப்படுத்த உதவிகளை வழங்க முன்வருமாறும் குழுக்களாகவும், தனி நபர்களாகவும் சிரமாதன பணிகளை மேற்கொண்டு தங்களுடைய உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

சுகாதார பணி உதவியாளர்கள் 85 பேர் மன்னார் வைத்தியசாலையில் பற்றாக்குறையாக காணப்படுகின்ற நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள 10 நபர்களே குறித்த சுத்தப்படுத்தல் பணிகளை மன்னார் வைத்தியசாலை சூழலில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *