மரக்கறிகள் மீதான வரியை குறைக்குமாறு கோரி யாழில் சந்தை வியாபாரிகள் பகிஸ்கரிப்பு…!samugammedia

மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சத்தியக்காடு சந்தை வியாபாரிகள் இன்றையதினம்(04) பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் எடுக்கும் குத்தகைதாரருக்கு வியாபாரிகள் 4 வீத வரி செலுத்த வேண்டும் என்ற விடயம் ஏற்கனவே அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்,  பிரதேச சபையும் சந்தையை குத்தகைதாரருக்கு வழங்கியது. 

இந்நிலையில் குறித்த வரி பிரச்சினை ஏற்பட்டதனால் குத்தகைதாரர், வலி.மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் குறித்த பகுதிக்கு சென்றனர். 

அவர்கள் அங்கு இருந்த வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த வருடம் குறித்த குத்தகைதாரர் மனிதாபிமான ரீதியில் ஒரு மூடை மரக்கறிக்கு 60 ரூபா வரி வாங்கியுள்ளார். 

இந்த ஆண்டு விலைகள் அதிகரிப்பு காரணமாக மரக்கறிகளுக்கு கிலோவுக்கு மூன்று ரூபாவும், வெங்காயத்துக்கு கிலோவுக்கு ஒரு ரூபாவும், உருளைக் கிழங்குக்கு கிலோவுக்கு இரண்டு ரூபாவும் வரியாக கோரியுள்ளார். அல்லது அனைத்து மரக்கறிகளுக்கும் இரண்டும் ரூபா வரியாக கோரியுள்ளார்.

ஆனால் அந்த வரிப்பணத்தை தங்களால் செலுத்த முடியாது என்றும் ஒரு மூடை மரக்கறிக்கு 80 ரூபா வரியாக தருவதாகவும் அல்லது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கு கிலோவுக்கு ஒரு ரூபா வரியாக தருவதாகவும் ஏனைய அனைத்து மரக்கறிகளுக்கும் கிலோவுக்கு இரண்டு ரூபா படி வழங்குவதாகவும் வியாபாரிகள் கூறினர்.

இறுதியில் இரண்டு தரப்பினரும் அனைத்து மரக்கறிகளுக்கும் இரண்டு ரூபா வரி செலுத்துவதாக தெரிவித்து இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *