யாழில் டெங்கு அபாயம்: வைத்தியர் கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!samugammedia

இலங்கையின் பல பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் யாழில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக  யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தற்போது நாட்டில் நிலவும் தீவிர டெங்கு பரம்பல் நிலமையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சுகாதார அமைச்சினால் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக ஜனவரி 08 ஆந் திகதி தொடக்கம் ஜனவரி 10 ஆந் திகதிவரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் வீடுகளையும், அலுவலகங்கள், பொது இடங்களையும் குழுக்களாகப் பரிசோதனையிட்டு நுளம்பு பெருகும் இடங்களைக் கண்காணித்து அழிக்க திட்டமிடப்பட்டள்ளது.
இப்பணியில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலீசார் மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டர்கள் இணைந்து ஈடுபடவுள்ளனர்.
முதல்நாளான 08ஆந் திகதி பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், மற்றும் மயானங்கள் பார்வையிடப்படவுள்ளன.
இரண்டாம் நாளான 09 ஆந்திகதி அரச தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டட நிர்மானத்தளங்கள் பார்வையிடப்படவுள்ளன.
மூன்றாம் நாளான 10 ஆந்திகதி பொது மக்களின் வீடுகள் பார்வையிடப்படவுள்ளன.
எனவே பொது மக்கள் தமது வீட்டுவளாகங்கள் மற்றும் சுற்றாடலை துப்பரவு செய்து நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அழிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். வேலைத்தலங்களில் சிரமதான அடிப்படையில் நுளம்பு பெருகும் இடங்கள் சுத்திகரிக்கப்படல் வேண்டும்.
குழுப் பரிசோதனையின்போது டெங்கு பரம்பலுக்கு ஏதுவான நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் உள்ள வீட்டு, நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள்  வேலைத்தலங்கள் மற்றும் பொது இடங்களை துப்பரவாக வைத்திருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *