நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சடலத்தை சவக்குழியில் இருந்து மீண்டும் தோண்டி எடுத்து, ஆடைகளை கழற்றி நிர்வாணமாக விட்டுச் சென்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பண்டாரவளை பதுலுகஸ்தான பகுதியைச் சேர்ந்த ரஷ்மிகா மதுஷானி என்ற 24 வயதுடைய யுவதி நிமோனியா காய்ச்சலால் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அனைத்து மத சடங்குகளுக்கு பின் யுவதியின் சடலம் மறுநாள் புதைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த யுவதியின் பிறந்த தினமான இன்று (07) யுவதியின் தந்தை கல்லறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது தனது மகளின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, ஆடைகள் இன்றி நிர்வாணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து, இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவருகின்றது.




