சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி கிழக்கில் அமைதிவழிப் பேரணி…! ஆதரவு வழங்குமாறு கோரிக்கை…!samugammedia

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிக்குமாறு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அன்றைய தினம் முன்னெடுக்கப்படும் அமைதி வழி போராட்டத்திற்கும் ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
                   
ஏற்கனவே, இலங்கையின் சுதந்திர தினத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கரி நாளாக பிரகடனப்படுத்தி உள்ள நிலையில் அதற்கு ஆதரவாக கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் ஆதரவு தெரிவித்து இன்று மட்டு ஊடகமையத்தில்  ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சுகந்தி,அம்பாறை மாவட்ட தலைவி த.செல்வராணி,திருகோணமலை மாவட்ட தலைவி செபஸ்டியான் தேவி ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் ஆனால் அன்று எங்களுக்கு கறுப்பு தினம். வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட அதாவது கறுப்பு தினமாகிய சுதந்திர தின நாளில் 8 மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சேர்ந்து மட்டக்களப்பு கல்லடி பாலம் தொடக்கம் காந்தி பூங்கா வரை அமைதி வழியான போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளோம். இந்தப் போராட்டமானது வடக்கிலும் இடம் பெறவுள்ளது.
உண்மையில் இன்று சுதந்திர தினம் என்று கூறுகின்றார்கள் எங்கே சுதந்திர தினம் கதைக்க கூட சுதந்திரம் அற்ற சுதந்திர தினம் இந்த இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. சுதந்திர தினம் என்று சொன்னால் இலங்கை சுதந்திரம் அடைந்த அக்காலம் தொட்டு இன்று வரை தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை.
இன்று தமிழர்களாகிய நாங்கள் எங்களது வாயால் வரும் வார்த்தைகளை கூட வெளியில் சொல்ல முடியாத அளவு சுதந்திரம் இல்லை சுதந்திரமற்ற இலங்கை நாட்டில் சுதந்திர தினம் எதற்கு.
இன்று 14 வருடங்களாக எங்களது போராட்டங்களை தொடர்ந்து எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றோம். எத்தனை ஜனாதிபதிகள் மாறி மாறி வந்தாலும் எத்தனை பிரதமர்கள் மாறி மாறி வந்தாலும் எங்களுக்கான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. நாங்கள் தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பது எமது உயிர்களை. ஒவ்வொரு உயிர்களையும் தொலைத்து விட்டு வீதியில் நின்று 220 க்கு மேற்பட்ட தாய்மார்களை இன்று இழந்து நிற்கின்றோம்.
அது மாத்திரமல்ல இன்று இலங்கை ஜனாதிபதி எத்தனையோ பேர் வந்து சென்றார்கள். இவர்களிடம் எமது பிரச்சினைகளை எவ்வாறு எல்லாம் எடுத்து கூறினோம். எங்களுக்கான ஒரு சிறு துளி வெளிச்சம் கூட இன்று எங்களுக்கு கிடைக்கவில்லை அதன் பிற்பாடு தான் சர்வதேசத்தை நாடி நிற்கின்றோம். இன்று எங்களுக்காக தோள் கொடுப்பவர்களை முக்கியமானவர்கள் ஊடகவியலாளர்கள். இந்த ஊடகவியலாளர்கள்இன்று தாக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள.; எங்களோடு தோளோடு தோள்நின்று போராடும் 8 மாவட்ட தலைவிகளும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அண்மையில் ஜனாதிபதியை சந்திப்பதற்காக சென்றிருந்த சிவானந்தன் ஜெனிற்றா  என்பவர் கூட இன்று சிறையில் இருந்து தான் வந்திருக்கின்றார். ஜனாதிபதியை சந்திக்க கூட இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை.இந்த மூவின மக்களுக்காக தான் அந்த ஜனாதிபதி. இன்று அவரை சந்திக்க ஒருவருக்குமே உரிமை இல்லை என்றால் அது என்ன ஜனாதிபதி?.
இன்னும் எத்தனை ஜனாதிபதிகள் மாறி வந்தாலும் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கப் போவதில்லை. இலங்கை நாட்டின் சுதந்திரம் என்பது இன்று விளங்குகின்றது.
ஒரு இனத்துக்கு மாத்திரமே. வேறு எவருக்கும் அல்ல என்பதனை எடுத்துக் கூற விரும்புகின்றேன்.
அது மாத்திரமல்ல இன்று சர்வதேசத்திடமும் நாங்கள் ஒன்றினை வினையமாக கேட்டு நிற்கின்றோம.; சுதந்திரம் இல்லாத இந்த இலங்கை நாட்டில் எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக இன்று எவ்வளவு பொய் பிரச்சாரங்களை ஐ.நா சபையில் பேச முற்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
அனைத்தும் பொய் இந்த ஓ.எம்.பி,  டி. ஆர். சி அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்காக. இன்று சட்டங்கள் வந்திருக்கின்றது பயங்கரவாதத்தை ஒழித்த இந்த நாட்டில் இன்னமும் புதுப்புது சட்டங்களை முளைக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அதுவே எங்களது சுதந்திரத்தை இன்று முடக்கி கொண்டே இருக்கின்றது பிள்ளைகளுக்கு சுதந்திரம் இல்லை,பாடசாலை மாணவர்களுக்கு சுதந்திரம் இல்லை. ஜனநாயக ரீதியில் நமது உறவுகளை கேட்டு போராடும் நமக்கு கூட சுதந்திரம் இல்லை இன்று சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக இன்று அனுஷ்டிக்கின்றோம்.
எதிர்வரும் நான்காம் தேதி நடக்க இருக்கும் சுதந்திர தினத்தை எதிர்க்கும் இந்த போராட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். மூன்று இன மக்களும் சேர்ந்து இந்த கடையடைப்பினை செய்து அன்று நடைபெறும் அந்த நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
பல்கலைக்கழக வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தும் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் அனைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் அனைத்து ஊடகவியலாளர்களும் அனைத்து அரசு சார்பற்ற நிறுவனங்களும் அனைத்து மதகுருமார்களும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் ஆட்டோ சங்கத்தினர் மீனவ சங்கத்தினர் அனைவரையும் எங்களது இந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்து  எங்களுக்கான ஒரு முடிவை பெற்று தர எங்களுடன் நின்று சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக செய்ய முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *