அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சனத் நிசாந்தவின் பூதவுடல் நல்லடக்கம்..!

திடீர் விபத்தொன்றில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சரும்,  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சனத் நிசாந்த பெரேரேவின் பூதவுடல் இன்று (28) ஆராச்சிக்கட்டுவ ராஜக தளுவ தேவாலய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிலாபம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடல் இன்று பிற்பகல் 1 மணியளவில் இறுதிக் கிரியைக்கான மும்மத சமய அனுஷ்டானங்களுடன், அரச தலைவர்களில் உரைகள் என்பனவற்றின் பின்னர் பூதவுடல் வாகன பேரணியோடு ஊர்வரமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த இறுதி நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன மெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உட்பட அரச திணைக்கள பிரதானிகளும், முப்படையினரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை ஆராச்சிக்கட்டுவ பகுதிக்கு வருகை தந்து, இராஜாங்க அமைச்சரின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வடமேல் மாகாண ஆளுநர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் அனுதாப செய்திகளும் இந்த இறுதி கிரியையின் போது வாசிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் அனுதாப செய்தியை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவும், பிரதமரின்  அனுதாப செய்தியை இராஜாங்க அமைச்சர் அசோக பியந்தவும், வடமேல் மாகாண ஆளுநர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் அனுதாப செய்தியை  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயதுன்ன ஆகியோரும்  வாசித்தனர்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி இறுதி கிரியை நிகழ்வில் பங்கேற்ற போதிலும் அவரது சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ அனுதாப செய்தியை வாசித்தார்.

இவ்வாறு வாசிக்கப்பட்ட அனுதாப செய்திகள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பெரேவிடம் கையளித்தனர்.

இதன்போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இராஜாங்க அமைச்சர் அருந்திக பர்னாந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுன பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகல காரியவசம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா தொடர்பில் தங்களது அனுதாபங்களை தெரிவித்து உரையாற்றினார்கள்.

இந்த இறுதி கிரியைகள் நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

இதன்போது, இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த ஆராச்சிக்கட்டுவ இல்லத்தைச் சுற்றி பொலிஸாரும், படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், புத்தளம் – சிலாபம் பிரதான வீதியின் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த சில இடங்களில் வீதித் தடைகள் போடப்பட்டிருந்ததுடன், போக்குவரத்து பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர்  சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்தனர்.

மேலும், இராஜாங்க அமைச்சரின் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில், ராகம வைத்தியசாலகயில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி  இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன் லொறி ஒன்றின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் அன்னாரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

1997 ஆம் ஆண்டு ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக ஆரசியலுக்குள் பிரவேசித்த சனத் நிசாந்த பெரேரா, 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்றார்.

மேலும் 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலிலும் அதிகூடி வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற சனத் நிசாந்த பெரேரா, மீன்பிடி, பெருந்தெருக்கள் மாகாண அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, கடற்தொழில் இராஜாங்க அமைச்சராக நியமித்தார்.

எனினும், கடற்தொழில் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய சனத் நிசாந்த பெரேரா, பின்னர் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

எனினும், 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் ரீதியான நெருக்கடியின் போது நீர்வழங்கல் இரஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சனத் நிசந்த பெரேரா நீக்கப்பட்டார்.

புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி சனத் நிசாந்த பெரேராவுக்கு மீண்டும் அதே இராஜாங்க அமைச்சுப் பதவியை வழங்கினார்.

அரசியல்வாதியாக இளம் வயதில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்த இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரே இறக்கும் போது அவருக்கு வயது 48 ஆகும். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

Leave a Reply