சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் சுகயீனம் மற்றும் போதிய பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் தம்பதியினர் விஷம் அருந்தி உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சூரியவெவ வெனிவெல்ஆர பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே இவ்வாறு விஷம் அருந்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளனர்.
மனைவியின் முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட நாட்களாக படுக்கையிலேயே உள்ள நிலையில் அவரது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கணவனால் அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.
வாழ போதிய பொருளாதார வசதி இல்லாததாலும் மனைவியை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல போதிய வசதி இல்லாதமையாலும் சுதந்திர தினத்தன்று இந்த முடிவை எடுத்துள்ளனர்.
விஷம் குடித்து வீட்டில் ஆபத்தான நிலையில் இருந்த கணவன் மனைவியை அயலவர்கள் சிகிச்சைக்காக சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதித்ததுடன்,
மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் பொருளாதார நிலைமை இல்லாத காரணத்தினால் தம்பதியினர் சில காலமாக கடும் விரக்தியில் இருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.