சம்பந்தன் சொன்ன விடயங்களில் ஒரே ஒரு விடயத்தை மட்டுமே அமுல்படுத்தினார் ரணில் – சுமந்திரன் குற்றச்சாட்டு..!samugammedia

ஜனாதிபதி தேர்தல் காலங்களை சுயமாக தீர்மானிப்பது சர்வாதிகாரத்தையே எடுத்துக்காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய(8)  பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி ஏன் பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கின்றார் என்று பலர் ஆச்சரியப்படலாம். தனது குறுங்கால ஆட்சியில் ஜனாதிபதி என்ற வகையில்  அவர்  பலதடவைகள் இதை செய்திருக்கிறார். ரணிலுக்கு சிம்மாசனத்தில் ஏறி பிரசங்கம் நடத்துவதற்கு விருப்பம் ஆகும். அந்த அக்கிராசன கதிரையில் ஏறி சபைக்கும் தேசியத்துக்கும் நாட்டுக்கும் அவர் சொல்ல வேண்டியதை பல தடவைகள் சொல்லி வந்திருக்கிறார். அவர் அந்த உரையையாற்றி மகிழ்ந்திருக்கும் அதேவேளை நாட்டு மக்கள் பொருளாதார நிலைமை காரணமாக மிகவும் பேராபத்தில் இருக்கிறார்கள்.

அவர் தனது பேச்சு திறமை காரணமாக பொருளாதாரத்தை மாற்றியுள்ளேன் என்று சொல்லியிருக்கலாம், எங்கள் எல்லோருக்கும் தெரியும் அவை எல்லாம் வெற்று வார்த்தைகள். IMF  நிவாரணமும் இன்னும் எங்களை இரவல் வாங்கச் செய்திருக்கிறது. இன்னும் இரவல் வாங்கிக்கொண்டே இருப்போம். அது இன்னும் எங்களை கடனுக்குள் தான் கொண்டு போகும். வெளியிலே விடயங்கள் மிகவும் நன்றாக உள்ளது போல தெரியும். ஆனால் உண்மையில் அது அப்படியல்ல. இதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நீண்ட கால பார்வையில் பார்க்கப் போனால் அது உண்மையல்ல. 

ஜனாதிபதி ரணில் இந்தாண்டை தேர்தல் ஆண்டாக அறிவித்துள்ளார். தேர்தல் திகதிகளை அவர் தீர்மானிப்பது போல தெரிகின்றது. இது குடியரசுநாடு, சர்வாதிகார ஆட்சியல்ல. அரசியலமைப்பு சட்டங்கள் சொல்லுகின்றன. காலத்துக்கு காலம் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்கிறது. அவர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார். இது ஜனநாயகத்துக்கும்  அரசியலமைப்புக்கும்  எதிரான ஒரு மீறுகையாகும். 

உங்களால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. அரசாங்க கொள்கை என்று சொல்லிக் கொண்டு உங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்கள் சொல்லலாம். அவர் இந்த சபைக்கு வந்து சொன்னார். முதலில் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று சொன்னார். எல்லோரும் கைகளை உயர்த்தி அதைச் செய்வோம் என்றீர்கள். இதையே 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னரும் செய்வதாக சொல்லி இருந்தார். இப்போது 76 ஆவது சுதந்திர தினமும் கடந்து விட்டது. நேற்றைய பேச்சிலே ஜனாதிபதி அவர்கள் அதைப் பற்றி ஒரு சொல் கூட  இந்த சபையிலே அவர் பேசவில்லை. தான் பதவியேற்ற போது அவர் இந்த சபைக்கும் மக்களுக்கும் முதலாவதாக சொன்னது, உடனடியாக இனப்பிரச்சினைக்கான தீர்வை நாங்கள் கண்டு கொள்ளுவோம். 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலே இந்த சபையிலே அனைவரையும் சேர்த்து அனைத்துக் கட்சி மாநாடுகளையும் 3 தடவைகள் கூட்டி 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னதாக தீர்க்கப்படும் என்று பறைசாற்றியிருந்தார். 

அப்போது அவர் எங்களை அழைக்கும் போதே சொன்னோம். இது வெறும் வார்த்தைகள். இதை செய்ய அவருக்கு அரசியல் பலம் கிடையாது. இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்ப்பவர்களை பாராளுமன்றத்தில் போலிப் பெரும்பான்மையோடு வைத்துக் கொண்டு ஜனாதிபதியினால் இதை செய்ய முடியாது. வெறும் வார்த்தை ஜாலங்களினால் எங்களை ஏமாற்றுகின்றார். ஆனாலும் நாங்கள் இதற்கு தடங்கலாக இருந்தோம் என்று சொல்வதற்கு இடம் கொடுக்க கூடாது என்பதற்காக நாங்கள் அனைத்துக் கூட்டங்களுக்கும் போனோம். எங்களுடைய ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தினோம். அப்படி செய்திருந்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

3 அல்லது 4ஆவது கூட்டத்திலே எங்களுடைய கட்சித் தலைவர் சம்பந்தன் சொன்னார். இந்த கூட்டங்களிலே எடுக்கப்படுகிற முடிவுகளிலே ஒரேயொரு முடிவு தான் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றார். அது என்னவென்றால் அடுத்த கூட்டத்துக்கான திகதி தான் அது என்றார். அது மட்டும்தான் அமுல்ப்படுத்தப்படுகின்றது என்று சம்பந்தன் சொல்லியிருந்தார். ஜனாதிபதி ரணில் இப்படிச் சொல்லிச் சொல்லி செல்வதே தன்னுடைய பழக்கமாக கொண்டிருப்பதால் இந்த விடயத்தை முற்றிலும் மறுதலித்தவராக அரசாங்க கொள்கை பிரகடனத்தை  உரையாற்றியிருக்கின்றார். 

இதனை முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். இந்த நாட்டில் பொருளாதார பிரச்சினை ஏற்படுவதற்கு அத்திவாரமே இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ்த் தேசிய பிரச்சினை. அதற்கான ஒழுங்கான ஒரு அரசியல் தீர்வு இல்லாமல் ஒரு ஆயுதத் தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைத்து அதற்காக கடன்கள் பெற்று பொருளாதாரத்தை நாசமாக்கி விட்டிருக்கிற காரணத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன். அதை தீர்க்காமல் நாட்டிலே மிகவும் முக்கியமான எண்ணிக்கையிலே சிறுபான்மையாக இருக்கின்ற இன்னுமொரு தேசிய இனத்தினுடைய அபிலாசை பூர்த்தி செய்யப்படாமல் இந்த நாட்டினுடைய பொருளாதாரம் எப்பவுமே சரிப்பட்டு வரப்போவதில்லை. எவ்வளவு தான் பேசினாலும், தான் செய்து முடித்துவிட்டேன் என்று மக்களுக்கு சொன்னாலும் மக்களுக்கு உண்மை தெரியும். ஜனாதிபதி தேர்தல் வருகின்ற பொழுது மக்கள் விழிப்பாகவிருந்து இதற்கு சரியான முறையிலே தங்களுடைய பதிலை அளிக்க வேண்டும். வெறுமனே இது பொருளாதார பிரச்சினை மட்டும் தான் என்று சொல்லிக்கொண்டு நாட்டின் அடிப்படையான பிரச்சினையான தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு ஒரு முடிவெடுக்காமல் அவர் தொடர்ந்து முன்செல்வாராக இருந்தால் இன்னும் அதளபாதாளத்திலே இந்த நாடு விழுவதை எவரும் தடுக்க முடியாது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *