நான்’என்பதை ‘நாம்’என மாற்றிட முடியுமானால் பல பிரச்சினைகளுக்கு சுலபமாக தீர்வுகளை எட்டிட முடியும்…! அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

நான்’ என்பதை ‘நாம்’ என மாற்றிட முடியுமானால் அதிகளவான பிரச்சினைகளுக்கு சுலபமாக தீர்வுகளை எட்டிட முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் இன்றையதினம்(09) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – 

புறனானூற்றிலே கணியன் பூங்குன்றனாரின்  ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்து வருபவன் நான். இங்கு ‘நான்’ என்பதை ‘நாம்’ என மாற்றிட முடியுமானால், இந்த நாட்டில் நிறைய பிரச்சினைகளுக்கு சுலபமான தீர்வுகளை எட்டிட முடியும் என நம்புகின்றேன்.

‘பொருளாதார வீழ்ச்சி’ என்பதன் அதி கோரமான வேதனைகளை முழுமையாக அனுபவித்திருந்த எமது மக்களையும், இந்த நாட்டையும் மீட்டு, இன்று முன்னேற்றகரமான நிலையினை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்ற வழிகளை முன்னெடுத்து வருகின்ற இந்த நாட்டின் மீட்பர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டு மக்கள் பட்ட துன்ப துயரங்களையும், இனிமேல் அனுபவிக்கப் போகின்ற நன்மைகளையும் ஒரு வரலாற்று அறிக்கையாக தனது கொள்கைப் பிரகடன உரையில் முன்வைத்திருக்கின்றார்.

குறிப்பாக ‘நமக்கு நாமே விளக்குகளாவோம்’ என்ற புத்த பெருமானின் போதனையில் ஆரம்பித்து, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதை வரிகளையும் இணைத்து அவர் தனது கொள்கைப் பிரகடன உரையினை ஆற்றியிருந்தார்.

இதேநேரம் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்து வருபவன் நான். இங்கு ‘நான்’ என்பதை ‘நாம்’ என மாற்றிட முடியுமானால், இந்த நாட்டில் நிறைய பிரச்சினைகளுக்கு சுலபமான தீர்வுகளை எட்டிட முடியும் என நம்புகின்றேன்  

‘நான்’ எனக் கூறும்போது உதடுகள் ஒட்டாமல் பிரிந்தே இருக்கும். ‘நாம்’ எனக் கூறும்போதுதான் உதடுகள் ஒட்டியிருக்கும் என கலைஞர் மு. கருணாநிதி  கூறுவார்.

ஓற்றுமை என்பது முக்கியமானது. இதனையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். 

‘ஓன்றுபட்டால் உண்டு வாழ்வே. நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே’ என்பது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதை வரிகள். அதே நேரம், ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்றொரு பழமொழியும் தமிழில் உண்டு.

அரசியல் ஆதாயங்களை கருதாமல், இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களை முன்வைத்து மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் எடுத்து வருகின்ற அனைத்து முயற்சிகளுக்கும், இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து தங்களது ஒத்துழைப்புகளை வழங்கினால், இந்த நாட்டினை வெகு விரைவாக அனைத்து துறை சார்ந்தும் முன்னேற்ற முடியும் என்பதை நாம் இன்று நடைமுறைச் சாத்தியமாக உணர்ந்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *