சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக முடங்கியிருந்த வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பினை இன்று (13) ஆரம்பித்துள்ளன.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல உதவுமாறு சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவத் வீரர்களை வைத்தியசாலைகளுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, தற்போது மேல், மத்திய, கிழக்கு மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தளபதிகளின் முழுமையான கண்காணிப்பில், கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள் களுபோவில, கராப்பிட்டி, மஹமோதர, பேராதனை, அநுராதபுரம் மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகளை இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.