சுகாதார துறையினரின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வின்றேல் போராட்டம் தொடரும்- இல்ஹாம் திட்டவட்டம்…!samugammedia

மருத்துவர்கள் தவிர்ந்த இலங்கையில் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ரூ. 35,000 கொடுப்பனவு கோரி இன்று (13)  காலை    முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் பணிப் பகிஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்றைய தினம் (12) நிதியமைச்சுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து  72 சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

வைத்தியர்களுக்கான சேவைக்கால   வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு  ரூ. 35,000 இலிருந்து ரூ. 70,000 ஆயிரமாக ரூ. 35,000 இனால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், குறித்த கொடுப்பனவை ஏனைய சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு தெரிவித்து, குறித்த அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்களும் இன்றைய தினம்(13) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

இதேவேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்கள் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைச் சங்கத்தின் வடமாகாண தலைவர் எஸ்.எச்.எம்.இல்ஹாம்,

இன்று (13) காலை 6.30 மணி  முதல் நாடு முழுவதும் சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைச் சங்கம் உள்ளடங்களாக 72 தொழில் சங்கங்களின் தலைவர்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.

இப் போராட்டமானது அப்பாவி மக்களுக்கு எதிரானது இல்லை.பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்களும் வருந்துகின்றோம்.

எங்களை அரசாங்கம் அரச சேவையாளர்கள் என கருதாத நிலையிலே இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்களும் அரச சேவையாளர்கள்.இச்சேவைக்கு நாங்களும் முக்கியமானவர்கள் என்பதை காண்பிப்பதற்காகவே  ஒன்றிணைந்த சுகயீன விடுமுறை போராட்டமாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டம் இன்றுடன் முடிவுக்கு கொண்டு வருவதா?அல்லது தொடர்ந்து முன்னெடுப்பதா? என்பது குறித்து உரிய அதிகாரிகள்,அமைச்சர்கள் எமது தலைவர்களுடன் கலந்துரையாடி சாதகமான பதிலை வழங்க வேண்டும்.இல்லை என்றால் எமது போராட்டம் தொடரும்.

பொதுமக்களாகிய உங்களுக்கு ஒரு விடயத்தை கூற விருப்புகின்றோம்.இப்போராட்டத்தை மக்களுக்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கவில்லை.

நாட்டின் அரசாங்கம் எமது கோரிக்கையை உரிய முறையில் செவிமடுக்காத காரணத்தினால் எங்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்படும்.ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply