ரணில் தந்திரமானவர் அல்ல…! ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டால் ஆட்சி கவிழும்…! அனுர எச்சரிக்கை…!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவது போல் தந்திரமானவர் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(18) இடம்பெற்ற குருநாகல் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்  தெரிவிக்கையில்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற புதிய விவாதம் எழுந்துள்ளது.

ரணில் தந்திரமானவர் என்று சிலர் சொல்கிறார்கள். எனினும் ரணில் கூறுவது போல் தந்திரமானவர் அல்ல. அவர் நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு; ஜனாதிபதியானார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலிலும் தப்பிக்க ஏதாவது செய்தால், தமது பதவி காலத்துக்கு முன்னரே அவர் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும்.

பிரதமராக பதவியேற்குமாறு கோட்டாபய ராஜபக்சவின் கோரிக்கையை சஜித் பிரேமதாச நிராகரித்ததன் காரணமாகவே ரணில் பிரதமராக முடிந்தது.

இல்லையெனில் ரணில் இப்போது வெறும் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்திருப்பார்.

பின்னர் சரத் பொன்சேகாவை பதவியேற்குமாறு கோரப்பட்டது. எனினும் பொன்சேகா முடிவெடுப்பதற்கு மூன்று நாட்கள் தேவை என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் மூன்று நாட்களுக்கு தாமதிக்க கோட்டாபய ராஜபக்சவினால் முடியவில்லை.

இதனையடுத்தே மூன்றாவது தெரிவாக ரணிலிடம் கோரிக்கை விடுத்தார். இதன்போது பதவியை ஏற்றுக்கொள்வதால் தனக்கு நட்டம் ஏதும் இல்லை என்பதால் அதனை ஏற்றுக்கொண்டார் என்று அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதியாக பதவியேற்றதால் ரணில் வீரர் அல்ல. மாறாக, மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட தம்மை சிறையில் அடைக்கவேண்டும் என்று கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியானமைக்காக, அவர் வெட்கப்பட வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply