கல்முனையில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு கூட்டம்…!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில்  போதைப்பொருள்  ஒழிப்பு மற்றும் குற்றச் செயல்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது  தொடர்பான சமூக மட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பினருடனான  விழிப்புணர்வு கூட்டம் நேற்று (18) மாலை கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் ஆரம்பமானது.

 இந்நிகழ்வானது, கல்முனை பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியும்  விசேட அதிதியாக  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்(ஏ.எஸ்.பி) கே.எம்.லசந்த புத்திகவும் கலந்து சிறப்பித்தனர்.

இக்கலந்துரையாடலில் பிரதான வளவாளராக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம். எம். ஜி. பி. எம். றஸாட் கலந்து கொண்டு  உரையாற்றினார்.

பிரதேச சமூக பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனைகள், சிவில் குற்றங்கள், முரண்பாடு, குடும்ப பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட தலைப்புக்களை அடிப்படையாக கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட  பல தரப்பினரிடம்  கலந்துரையாடப்பட்டன.

மேலும், சமூக பாதுகாப்பு நிறுவனமான குடும்பம், பாடசாலை, சமய நிறுவனம், சமூக அமைப்பு நிறுவனத்தின் வகிபாகம், ஏதிர்காலத்தில் சமூகத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பு இடையிலான சமூக இடைவினையை அதிகரித்தல், பாடசாலை மாணவ, மாணவிகள் ஒழுக்கம், வீதி போக்குவரத்து விதி முறை தெளிவுபடுத்தல், சமூக பாதுகாப்பினை மேன்படுத்துவதற்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல், சமூக சேவை திட்டங்கள், பொது சிரமதான பணிகள் நடைமுறைப்படுத்தல் போன்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

அத்துடன் பிள்ளைகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு பெற்றோரின் கவனயீனமும் காரணமாகும்.இவ்விடயத்தில் பெற்றோர்கள் ஒத்துழைக்காவிடின் இந்த போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் முன்னேற்றமானது ஏற்பட போவதில்லை.இதை விட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை தமது பிள்ளைகள் போன்று கண்காணிக்க வேண்டும்.இது தொடர்பில் பல கலந்துரையாடல்களை  மேற்கொள்ள இருக்கின்றோம் என அதிதிகளாக கலந்து கொண்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இக்கலந்துரையாடலில் போதைப்பொருளின் தாக்கங்கள் , போதைப்பொருளை  தடுப்பது எவ்வாறு, போதைப்பொருள்  பொருளாதாரத்தை எவ்வாறு சீரழிக்கின்றது, போதைப்பொருளை எவ்வாறு தடுக்கலாம்  ,உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்  அதிதிகள் உரைகளை நிகழ்த்தினர்.

குறித்த கலந்துரையாடலில்  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச்செயலாளர் எம்.ஐ;.எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உட்பட பொலிஸ் ஆலோசனை குழு  உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள் அதிபர்கள் மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் விளையாட்டுக்கழகங்கள் வர்த்தகர்கள் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகள்  பொதுமக்கள்  பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *