தேசிய அடையாள அட்டை விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின் தலையீடு தேவையில்லை…!அமைச்சர் ஜீவன் நடவடிக்கை…!

மலையக பெருந் தோட்டப் பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் பிரதீப் சபுதந்திரிக்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

மலையக பெருந் தோட்டப் பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது தோட்ட முகாமைத்துவத்தின் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

இந்த ஆவணத்தை தோட்ட நிர்வாகத்திடம் பெறுவதற்கு பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவது தொடர்பில் இ.தொ.காவின் இளைஞர் அணி தலைவர் எஸ்.ரூபதர்ஷனிடம் இளைஞர்கள் பலர் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் இளைஞர் அணி தலைவர், அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து ஏனைய சமூகங்கள் போன்று வதிவிடத்தை உறுதிசெய்யும் நடவடிக்கையும் கிராம சேவகர்கள் ஊடாக முன்னெடுக்குமாறு கோரி, இது விடயத்தில் தோட்ட நிர்வாக தரப்பிடம் இருந்து ஆவணங்கள் எதுவும் பெறப்படாத வகையில் பொறிமுறையை உருவாக்குமாறு கோரி ஆட்பதிவு திணைக்கள ஆணையாளருக்கு அமைச்சரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *