சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படும் ஆவணங்கள்! இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

தேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்குமாறு சமூக ஊடக பாவனையாளர்களிடம் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

உரிமையாளர்களைக் கண்டறியும் நோக்கில் தேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதன் காரணமாக குற்றச் செயல்கள் இடம்பெறலாம் என அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

தொலைந்த பணப்பையை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க்கும் நோக்கில் சிலர் பணப்பையில் உள்ள தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டுகள், அலுவலக அடையாள அட்டைகள் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் போன்றவற்றை புகைப்படம் எடுத்து, பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துகின்றனர்.

ஆனால், இவ்வாறு தனி நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதன் மூலம், குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களுக்கு அந்த தகவல்களைப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திம அருமப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply