புத்தளம் – சிலாபம் நகரில் உள்ள சிதாரா மூலிகை பண்ணையை மேற்பார்வை செய்யும் நோக்கில் , வடமேல் மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் எம .பி.எஸ்.கே.ஆர்.முத்துகல தலைமையிலான குழுவினர் நேற்று விஜயம் செய்தனர்.
வடமேல் மாகாண ஆயுர்வேத ஆணையாளராக புதிதாக கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட, வைத்தியர் எம .பி.எஸ்.கே.ஆர்.முத்துகலவின் முதலாவது விஜயம் இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தில் வடமேல் மாகாண ஆயுர்வேத பிரதி ஆணையாளர் வைத்தியர் ஐஏ.சிவாதரன், வடமேல் மாகாண சமூக வைத்திய உத்தியோகத்தர்களின் மேற்பார்வை அதிகாரி வைத்தியர் நர்மதா திசாநாயக்க , சிலாபம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சானிகா பிரியதர்சினி உட்பட சிலாபம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட சமூக வைத்திய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது, மூன்று தசாப்தங்களை கொண்ட சிலாபம் சிதாரா மூலிகை பண்ணையில் காணப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகள் தொடர்பில் சிதாரா ஆயர்வேத வைத்திசாலையின் நிறுவுனர் வைத்தியசூரி, வைத்தியர் பி.எம்.எம்.சாலின் அவர்களினால் வருகை தந்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இலங்கையில் கிடைக்கும் மிகவும் அரிதான மூலிகைகளும் இங்கு காணப்படுவதாகவும், இலங்கையில் இல்லாத சில மூலிகைகளும் வெளிநாட்டில் இருந்து இந்த மூலிகை பண்ணையில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், சிதாரா மூலிகை பண்ணையை பார்வையிட்ட வடமேல் மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் எம .பி.எஸ்.கே.ஆர்.முத்துகல உள்ளிட்ட குழுவினர் சிதாரா உற்பத்திகளையும் , ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் முறைகளையும் பார்வையிட்டதுடன், மூலிகை மரக் கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.