ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை முன்னின்று நடத்தும் பசில் ராஜபக்சவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இரு தரப்பினருக்கும் இடையிலான எதிர்கால அரசியல் ஏற்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடவுள்ளனர்.
தேர்தல் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்சிகளுக்கு இடையே தேர்தல் கூட்டணி உருவாகி வரும் வேளையிலும் எந்தத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்று கட்சிகள் விவாதிக்கும் சந்தரப்பத்திலும் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, அதன் சிரேஷ்ட உப தவிசாளரான மகிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதானமாக கொண்டு கட்டியெழுப்பப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.