யானை வேலிகளைப் பாதுகாக்க 4,500 உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள அனுமதி..!!

யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வன ஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல் நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார்.

அதற்காக புதிய பணியாளர்கள் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள். அமைச்சுக்கு இணைத்துக் கொள்ள அங்கீகாரம் பெற்ற பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏற்கனவே யானை வேலியின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்தார்.

நாட்டின் காடுகளை மொத்த நிலப்பரப்பில் 32% வரை அதிகரிக்கும் திட்டத்துடன் தொடர்புடைய வன எல்லைகளை நிர்ணயம் செய்யும் பணி இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதனைத் தெரிவித்தார்.

“சர்வதேச காடுகள் தினம் மார்ச் 21 அன்று கொண்டாடப்படுகிறது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தலா ஒரு செடியை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மொத்த நிலப்பரப்பில் காடுகளை 32% வரை அதிகரிப்பதற்கான திட்டம் தொடர்பில் காடுகளின் எல்லை நிர்ணயம் இந்த வருடத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எமது அமைச்சின் கீழ் உள்ள வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் விடயமாகும்.

மேலும் உமாஓயா முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்களுக்கு புதிதாக நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கீழ் உமாஓயா பகுதிக்கு 45 MCM குடிநீரை வழங்கவும், 120 மெகாவோட் நீர்மின்சாரத்தை பெறவும் பரீட்சார்த்து பணிகள் நடைபெற்று வருகிறன. இதில், 120 மெகாவோட் நீர் மின் உற்பத்தியும் தேசிய கட்டமைப்பில் சேர்க்கப்பட உள்ளது என வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *