ரமழான் விடுமுறை…! முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை…! இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டு…!

அரசாங்கத்தினால் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ரமழான் விடுமுறையை விண்ணப்பித்துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கவலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் இன்று(12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என 04/2024 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கை அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபன, நியதிச் சட்ட சபைத் தலைவர்களை விழித்து வெளியிடப்பட்டுள்ளது. 

எனினும், கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் இந்த விசேட விடுமுறையை பெற விரும்புபவர்கள் அதற்காக விண்ணப்பித்து முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுவதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இது சுற்றறிக்கைக்கு முரணான செயற்பாடாகும். அரசு ,முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு இந்த ரமழான் காலத்தில் கொடுத்துள்ள சலுகைகளை தடை செய்கின்ற ஒரு செயற்பாடாகும்.

சில அதிகாரிகளின் குரோத எண்ணம் இதன் மூலம் தெளிவாக புலப்படுகின்றது. 

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு அவர்கள் தொழுகையிலும், மதவழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஒருவர் முஸ்லிம் உத்தியோகத்தர் என தெரிந்தால் அவருக்கான இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அலுவலகப் பிரதானியின் கடமையாகும். 

கிழக்கு மாகாண சபையில் சமீப காலமாக உருவாக்கப்பட்டு வரும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே இதனை நோக்க வேண்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *