கோட்டாவின் நூலில் மாயமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி நடவடிக்கை…! சபா.குகதாஸ் தெரிவிப்பு…!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ஆட்சிக்கு வருவதற்காக நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி நடவடிக்கை தொடர்பில் அவரது நூல் குறிப்பிட மறந்து விட்டதா? என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட நூலில் தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்ற சர்வதேச சதி நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறும் சர்வதேச சதியில் ஈடுபட்ட நாடுகள் தொடர்பில் வெளிப்படையாக பதிவு செய்ய தவறி விட்டார் என்ற பெரும் விமர்சனத்துக்கு அப்பால் ரஷ்ய தூதரகம், கோட்டாபய சதியை ஏற்படுத்திய நாடுகளை குறிப்பிட வேண்டும் என தமது கருத்தை பதிவு செய்துள்ளது.

கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தொடர்ந்து குறிப்பிடும் விடயம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கோட்டாபய ஆட்சிக்கு வருவதற்காக நடத்தப்பட்ட சதி நடவடிக்கை என்றும், அதன் பின்னணியில் சர்வதேச சதி இருப்பதாக கூறிவருகிறார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான  நீதிக்காக  ஐக்கிய நாடுகள் சபையின் கதவுகளையும் தட்டியுள்ளார்.  இந்த சர்வதேச சதி தொடர்பில் கோட்டாவின் நூல் குறிப்பிட மறந்து விட்டதா?

சிறீலங்காவில் ஆட்சிக்கு வரும் ஜனாதிபதிகள் எல்லோரும் சர்வதேச நாடுகளின் குறிப்பாக பூகோள நாடுகளின் உதவியுடன் தான்  வந்தனர்.

எதிர்காலத்திலும் இது தொடரும். இதனை தடுக்க ஒரே வழி தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தான். 

ஆனால் ஆட்சிக்கு வரத் துடிக்கும் பேரினவாதக் கட்சிகள் இதனை விரும்பமாட்டார்கள்.

இதனையும் தாண்டி நாட்டின் நிரந்தர அமைதிக்கும் உள் நாட்டில் சர்வதேச சதிகளை அல்லது ஆதிக்கங்களை கட்டுப்படுத்த சகோதர இனங்களின் அபிலாசைகளை மதித்து அதிகாரங்களை பகிர்வதே நாடு முன்னோக்கி செல்ல வழி திறக்கும்  எனவும் அவர்  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *