6000 ஊழியர்களின் வேலை சிக்கலில்..! ஸ்ரீலங்கா எயார்லைன்ஸூக்கு அமைச்சரின் எச்சரிக்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது செயற்பாட்டு மற்றும் நிதிப் பிரிவுகளின் முன்னேற்றத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் காட்ட முடியாவிட்டால் சுமார் 6,000 ஊழியர்களின் வேலைகள் நிச்சயமற்றதாக இருக்கும் என கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

விமான சேவையின் தற்போதைய முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று காலை அவரது அலுவலகத்தில் நிறுவன நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அவ்வப்போது தனது செயற்பாடுகளில் தொடர்ச்சியான தாமதங்கள் காரணமாக குற்றம் சுமத்தப்பட்டதுடன் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. 

இந்த தாமதம் சமீபகாலமாக பயணிகளுக்கு எரிச்சலையும், சிரமத்தையும் ஏற்படுத்தியது.

விமான சேவையை தொடர்ந்தும் நடத்துவதற்கு பல வர்த்தக வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற்ற 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 510 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டி சில்வா தெரிவித்தார். 

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை கவர்ச்சிகரமான நிதி இருப்புநிலையுடன் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

விமான சேவையின் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும், ஆறு மாதங்களில் சிறந்த நிதி ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நிறுவன நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் இந்த முயற்சியில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் மேலும் கூறினார். 

கலந்துரையாடலின் போது, ​​16 விமானங்கள் தற்போது இயக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் ஆறு நீண்ட தூரம் மற்றும் 29 குறுகிய தூர விமானங்கள் இயக்கப்படுவதாகவும் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நடவடிக்கைகளுக்காக பெல்ஜியத்திலிருந்து மூன்று விமானங்களும், ஃபிட் ஏர் நிறுவனத்திடம் இருந்து மற்றொன்றும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply