கிழக்கில் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படும் முஸ்லிம் அதிகாரிகள்! இம்ரான் எம்.பி விடுத்த எச்சரிக்கை

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் அதிகாரிகளுக்கெதிரான விரோதப் போக்கு தொடர்ந்து வருகின்றது. கட்டங்கட்டமாக முஸ்லிம் அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கவலை வெளியிட்டுள்ளார். 

ஊடகங்களுக்கு இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளில் இருந்த முஸ்லிம் அதிகாரிகள் ஆளுநரால் அகற்றப்பட்ட செய்தியை ஏற்கனவே நான் பகிரங்கப்படுத்தியிருந்தேன். 

அந்த வரிசையில் தற்போது இலங்கை கல்வி நிர்வாக சேவை மூத்த அதிகாரி ஒருவர் எவ்வித பதவியும் வழங்கப்படாது இடமாற்றப்பட்டிருக்கிறார். 

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் 5 அமைச்சுக்களில் இரண்டு தமிழ் செயலாளர்களும், இரண்டு முஸ்லிம் செயலாளர்களும், ஒரு சிங்கள செயலாளரும் பணியாற்றி வந்தனர்.

இந்த மாகாணத்தின் இனச் சமநிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு அமைச்சிலும் முஸ்லிம் செயலாளர்கள் இல்லை. 

ரணில் – ராஜபக்ச ஆட்சியில் முஸ்லிம் விரோதப் போக்கு இன்னும் தொடர்கின்றது என்பதற்கு இவை சிறந்த உதாரணங்களாகும்.

எனவே. கிழக்கு மாகாண முஸ்லிம் சமுகம் விழித்தெழ வேண்டிய அவசர நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 

முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமுகத்தின் உரிமைகள் தொடர்பாக பேசுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பது இவற்றின் மூலம் தெளிவாகத் தெரிகின்றது.

எனவே, முஸ்லிம் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள், புத்தி ஜீவிகள், உலமாக்கள் என அனைவரும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.  என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *