கேள்விகளைக் கண்டு எவரும் பதற்றமடையத் தேவையில்லை; வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்! மனோ எம்.பி. வலியுறுத்து

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஒரு வீடு, ரூபா இருபத்து எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளைக் கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலைத்திட்டப் பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. 

இந்திய அரசின் நன்கொடை உதவியுடனான இந்தத் திட்டம் தொடர்பில் இந்திய அரசுக்கு நன்றி கூறி, வீடு கட்டும் பணிகளை நாம் வரவேற்கின்றோம். அதேவேளை, இந்தத் திட்ட நடைமுறையில் முழுமையான வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடாகும்.

பெருந்தோட்டங்களில் இந்திய உதவியுடனான தனி வீடுகள் கட்டும் திட்டத்தை, 2015-  2019 ஆண்டுகால நல்லாட்சியின் பங்காளிகளாக இருந்தபோது நாம்  ஆரம்பித்து வைத்தோம். எமது காலப் பகுதியில் நடைபெற்ற இந்த வீடு கட்டும் பணிகளில், யூ.என். – ஹெபிடாட் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித வாழ்விடத் திட்டம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனம் ஆகிய நம்பகத்தன்மை கொண்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளை நடைமுறைபடுத்தல், கண்காணிப்பு ஆகிய பொறுப்புகளைச் சிறப்பாகச் செய்தன.

பணிகளைக் கூட்டிணைக்கும் பொறுப்பை மாத்திரமே எமது புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு செய்தது. இதனால், இந்திய உதவியுடனான பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை அன்று இருந்தது.

இன்று இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்தப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. ஆகவே, வெளிப்படைத்தன்மை தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. எமது கேள்விகளைக் கண்டு எவரும் பதற்றமடையத் தேவையில்லை. நாம் நியாயமான கேள்விகளைத்தான் எழுப்புகின்றோம். அவற்றுக்குப் பொறுப்பில் உள்ளவர்கள் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இந்தியா ஒட்டுமொத்தமாக 46 ஆயிரம் வீடுகளை இலங்கையில் வடக்கு – கிழக்கிலும், 14 ஆயிரம் வீடுகளைப் பெருந்தோட்டங்களிலும் கட்டுவிக்கின்றது. இதில் மூன்று கட்டங்களில் வடக்கு – கிழக்கில் 46 ஆயிரம் வீடுகளும், பெருந்தோட்டங்களில் 4 ஆயிரம் வீடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. மிகுதி 10 ஆயிரம் வீடுகளில் 1,300 வீடுகள் நான்காம் கட்டத்தில் இன்று ஆரம்பித்து வைக்கபட்டுள்ளன.

முதல் மூன்று கட்டங்களிலும் மேற்சொன்ன நம்பகத்தன்மை கொண்ட அரசசார்பற்ற நிறுவனங்கள், கட்டுமான நடைமுறைப்படுத்தல், கண்காணிப்புப் பணிகளைச் செய்தன. அரச நிறுவனமான தேசிய வீடமைப்பு அதிகார சபையும் பங்கு வகித்தது. இந்த முறை, அரசசார்பற்ற நிறுவங்கள் அகற்றபட்டு முழுப் பொறுப்பும் அரச நிறுவனங்களான தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு மாத்திரம் வழங்கபட்டுள்ளன.

ஒரு வீடு, ரூபா இருபத்து எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளை கட்டும் பணி, எவரது கோரிக்கையின் பேரில், எக்காரணத்துக்காக அரச நிறுவனங்களுக்கு மாத்திரம் வழங்கபட்டுள்ளது என்ற கேள்வி மலைநாடு முழுக்க இன்று எதிரொலிகின்றது. அதையே, இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களின் அதிக வாக்குகளையும், மலையக தமிழ் மக்களின் ஆணையையும் பெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நான் இங்கே எழுப்புகின்றேன்.  

மேலும், இந்தத் திட்டம் தொடர்பில் “டெண்டர்” என்ற கேள்வி பத்திர கோரல் நிகழ்ந்து, கட்டுமான “கொன்றாக்ட்டர்” என்ற ஒப்பந்தக்காரர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டனாரா? அது நடந்து இருந்தால் எப்போது நடைபெற்றது? அதை நடத்திய நிறுவனங்கள் யாவை? “டெண்டர்” என்ற கேள்விப் பத்திர கோரல் தொடர்பில் அரச விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா?

வீடுகளைக் கட்ட, தோட்ட நிறுவனங்கள் காணிகளை விடுவித்து உள்ளனவா? அவற்றுக்கு மண் சரிவு அபாயம் இல்லை என்ற தேசிய கட்டட ஆய்வு நிறுவனச் சான்றிதழ்கள் வழங்கபட்டுள்ளனாவா? ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டபோது, அதற்குச் சமாந்திரமாக தோட்டங்களில் அடிக்கல்கள் நாட்டியவர்கள் யார்? அவர்கள் கட்டுமான “கொன்றாக்ட்” என்ற ஒப்பந்தத்தைப் பெற்றவர்களா?

இத்தகைய வெளிப்படைத்தன்மை தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. எமது கேள்விகளைக் கண்டு எவரும் பதற்றமடையத் தேவையில்லை. நாம் நியாயமான கேள்விகளைத்தான் எழுப்புகின்றோம். அவற்றுக்குப் பொறுப்பில் உள்ளவர்கள் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளார்கள்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *